Published : 11 Sep 2020 06:18 PM
Last Updated : 11 Sep 2020 06:18 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மந்தமான பாதாளச் சாக்கடை திட்டப் பணியை காரணம் காட்டி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து வீட்டில் முடங்கிக் கிடத்த மக்கள், தற்போது பஸ் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கரோனா ஊரடங்கிற்கு முன்பாக காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு சென்ற தனியார் பஸ்களில் கட்டணமாக ரூ.15-ம், அரசு பஸ்களில் ரூ.17 மற்றும் ரூ.18-ம் வசூலிக்கப்பட்டு வந்தன.
தற்போது திடீரென அரசு பஸ்களில் காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு கட்டணமாக ரூ.20 வசூலிக்கின்றனர். இதுகுறித்து பயணிகள் கேட்டதற்கு, ‘கட்டணத்தை உயர்த்தவில்லை. காரைக்குடி செஞ்சையில் பாதாளச் சாக்கடை பணி நடந்து வருவதால் காரைக்குடி கழனிவாசல், மானகிரி வழியாக சுற்றி தேவகோட்டை செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறோம்,’ பஸ் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதாளச் சாக்கடை திட்டப் பணி மந்தமாக நடப்பதற்காக பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அறிவிக்கப்படாத கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். காரைக்கு செஞ்சை பகுதியில் மந்தமாக நடந்து வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு பஸ் ஊழியர்கள் கூறுகையில், ‘ பாதாளச் சாக்கடை திட்டப் பணியால் நகரைச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. டீசல் அதிகம் செலவாவதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது,’ என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT