Published : 11 Sep 2020 05:11 PM
Last Updated : 11 Sep 2020 05:11 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையில் சிக்கிய 3500 ஹெக்டேர் நெற்பயிர்கள் வயல்களில் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பேரிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேளாண் செழுமையை வைத்தே நாஞ்சில்நாடு என போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வயல்வெளிகள் வீட்டு மனையாக மாற்றப்பட்ட போதும், வாழை, மரவள்ளி கிழங்கு, தென்னை என மாற்று விவசாயத்திற்கு பெரும்பாலான வயல்கள் மாறியபோதும் நெல் விவசாயத்திற்கான பரப்பு 6500 ஹெக்டேருக்கு குறையாமல் இன்றும் உள்ளது.
இந்த ஆண்டு ஜீன் மாதத்தில் இருந்து பெய்த பருவமழையால் குமரி மாவட்டத்தில் அணைகள், குளங்கள் அனைத்தும் நிரம்பின. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு நெல் வேளாண் பரப்பை கொண்ட வயல்கள் அனைத்திலும் இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டது. மழையுடன் இயற்கையும் ஒத்துழைத்ததால் நடவு செய்து 4 மாதங்களில் அறுடையாகும் அம்பை 16 ரக நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன.
கடந்த மாதம் இறுதியில் இருந்து அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. நல்ல மகசூலுக்கு கைகொடுத்த அதே மழை, தற்போது விவசாயிகள் வருவாய் பார்க்கும் நேரத்தில் இடையூறையும் ஏற்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே 500 ஹெக்டேர் வயல்களில் முதல்கட்ட அறுவடை முடிந்த நிலையில் 6 ஆயிரம் ஹெக்டேர் விளைந்த வயல்கள் அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது.
இதற்காக டெல்டா மாவட்டம், மற்றும் மதுரை, சேலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் வயல் ஏலாக்களில் முகாமிட்டு அறுவடை பணியை தொடர்ந்தன. இந்நிலையில் கனமழையால் நாகர்கோவில் புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, மணவாளகுறிச்சி பெரியகுளம், நெல்லிகுளம் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் 3500 ஹெக்டேர் வயல்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
விளைந்த நெற்பயிர்கள் சாய்ந்த மழையில் முளைத்து குருத்து வருகின்றன. குறிப்பாக பெரியகுளம் ஏலா, புத்தேரி, இறச்சகுளம் ஏலாக்களில் அறுவடையை இடையில் விட்டு இயந்திரங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மழை நின்று வெயில் அடிக்கும் நேரத்தில் மீண்டும் அறுவடை தொடங்கினாலும் 2 மணி நேரத்திற்குள் கனமழை பெய்கிறது. இதனால் அறுவடை செய்த நெல்களை சாக்கு மூட்டைகளில் கட்டி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும் விவசாயிகள் தவித்து
வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கரோனா ஊரடங்கின்போது நல்ல மகசூலால் வருவாய் ஈட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள் பேரிழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.
நெல் அறுவடையால் மீண்டும் வாழ்வாதாரம் பெற்ற விவசாய தொழிலாளர்களும் மீண்டும் வேலையின்றி தவித்து வருகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து வந்த அறுவடை இயந்திரங்களும் வயல் ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலத்தில் இருந்து அறுவடை பணிக்கு இயந்திரங்களுடன் வந்திருந்த தொழிலாளர்கள் கூறுகையில்; ஆண்டுதோறும் கன்னிப்பூ, கும்பப்பூ அறுவடை பணிக்காக சேலத்தில் இருந்து கன்னியாகுமரி மாட்டத்திற்கு வருவோம். தற்போது கர்தார் ரக இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்திற்கு கூலியாக 2 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறோம்.
கடந்த ஒரு வாரமாக நெல் அறுவடை செய்து கொண்டிருந்த்போது பெய்த கனமழையால் பாதியிலேயே பணியை விட்டு இயந்திரங்களுடன் வயல் ஓரமாகவே தங்கியுள்ளோம்.
3 நாட்களாவது மழை நின்று இயற்கை கைகொடுத்தால் தான் விளைந்த நெற்பயிர்களை கரைசேர்க்க முடியும். இல்லையென்றால் நெல் விவசாயிகளுக்கும், அறுவடை இயந்திர தொழிலாளர்களுக்கும் பேரிழப்பு தான் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT