Published : 11 Sep 2020 03:52 PM
Last Updated : 11 Sep 2020 03:52 PM
வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க தமிழக அரசு 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது என்று மக்களவை திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் குற்றம்சாட்டினார்.
வேலூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு பணிகள் தொடர்பாக திமுக எம்.பி. கதிர் ஆனந்த், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை இன்று (செப். 11) சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மோர்தானா அணையில் தண்ணீரை தேக்கி சுற்றியுள்ள பகுதியில் பாசன வசதி கிடைத்து வருகிறது. தற்போது அணை நிரம்பிவரும் நிலையில் அதிமுக அரசு மழைக்கால முன்னெச்சரிக்கையாக மோர்தானா அணைக் கால்வாய்களை தூர்வாரும் பணியை தொடங்கவில்லை. கால்வாய்களில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டியுள்ளது. உபரி நீரை திறந்துவிட்டால் கடைமடைக்குக் கொண்டு போய் சேர்க்க முடியாது.
எனவே,கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. இரண்டு நாட்களில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் அதிகம் இருப்பதால் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். பள்ளி தொடங்க 10 ஏக்கர் நிலம் கொடுத்தால் உடனடியாக பள்ளி தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.
ஆனால், நிலத்தைக் கொடுக்காமல் அரசு மெத்தனம் காட்டி வருகிறது.கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிலத்தை கொடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று ஆட்சியரிடம் கூறினேன். விரைவில் நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
பொன்னை-தரைப்பாலம் கட்டுமான பணி,போக்குவரத்து நெரிசலை குறைக்க சத்துவாச்சாரி-காங்கேயநல்லூர் தரைப்பாலம் பணி குறித்து கேள்வி எழுப்பியுள்ளேன். வேலூர் விமான நிலையம் தொடங்குவதில் ஏன் தாமதம் என்பது குறித்து நான் ஆய்வு செய்ய அனுமதி கேட்டுள்ளேன். விமான நிலையப் பணிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன்.
வேலூர் மாநகராட்சியில் மழைக்காலம் ஆரம்பித்துள்ளது. மாநகராட்சி முழுவதும் சாலைகள் அனைத்தும் தோண்டியுள்ளனர். இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். மழை வருவதற்கு முன்பாக உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க தோண்டிய பள்ளங்களை மூடி தார்ச்சாலை அமைக்க வேண்டும். இது அன்றாடம் மக்களை பாதிக்கும் பிரச்சினையாக இருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் வெட்டுவானம், பெருமுகை, கந்தனேரி பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. காட்பாடி மேம்பாலத்தை விரிவுபடுத்த ரயில்வே நிர்வாகம் தயாராக இருக்கிறது. பாலத்துக்கான இணைப்புச்சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்க வேண்டும். தற்போது, காட்பாடி ரயில்வே மேம்பாலம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT