Published : 11 Sep 2020 01:36 PM
Last Updated : 11 Sep 2020 01:36 PM
சிற்றரசியாக சிறுமலை மாற சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல ஏதுவாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.
மூலிகை நிறைந்த சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிச் செல்லும்போது அதில் இருந்து சிதறிய சிறிய மலைப் பகுதியே சிறுமலை எனப் புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் சிறுமலை உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1600 மீட்டர் உயரத்தில் 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகளுடன் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது.
சிறுமலையில் விளையும் பலா, வாழைப் பழங்களுக்கு தனி ருசி உண்டு. தனது தனித்துவத்தால் சிறுமலை வாழை புவிசார் குறியீடும் பெற்றுள்ளது. மலைக் காய்கறிகளான சவ்சவ், பீன்ஸ், அவரை எனப் பல்வேறு காய்கறிகள் மட்டுமின்றி எலுமிச்சை, காபி, மிளகு உள்ளிட்ட மலைப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
வனப்பகுதியில் காட்டு மாடு, கடமான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன.
சிறுமலை மலைப் பகுதியில் உள்ள தாளக்கடை, பொன்னுருக்கி, நொண் டிபள்ளம் ஆகிய இடங்களில் இன்றளவும் ஆங்காங்கே தனித்தனிக் குடிசைகள் அமைத்து பழங்குடியினர் வசித்து வரு கின்றனர்.
சிறுமலையில் தமிழ்நாடு ஓட்டல் கட்டுவது, பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது, இயற்கை எழிலை உயரத்தில் நின்று ரசிக்க ஏதுவாக உயர் கோபுரங்கள் அமைப்பது உட்பட ரூ.6 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை சுற்றுலாத் துறை அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இவற்றை அமைக்க இடம் கிடைக்காததால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் கிடப் பில் போடப்பட்டது. தோட்டக் கலைத் துறை, பட்டு வளர்ச்சித் துறைகளுக்கு சொந்தமான இடங்கள் இருந்தபோதும் அவற்றைப் பெற்று சுற்றுலா மேம்பாட்டுக்கு பயன்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
ஆண்டு முழுவதும் இதமான தட்ப வெப்பநிலை நிலவும் சிறுமலை பகுதியில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறையினர் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே சுற்றுலாவை மேம்படுத்த முடியும்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வித்யா கூறியதாவது:
சிறுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர தென்மலைப் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் நடைபாதை, வனப்பகுதியை உயரமான பகுதியில் இருந்து பார்த்து ரசிக்க உயர் கோபுரம், பட்டாம்பூச்சி பூங்கா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. தற்போது ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாத் தலமாக மட்டுமின்றி வனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு அறிவுப்பூர்வமான அதிக தகவல்கள் அடங்கிய இடமாகவும் பல்லுயிர் பூங்கா இருக்கும் என்றார்.
சிறுமலை ஊராட்சித் தலைவர் சங்கீதா வெள்ளிமலை கூறியதாவது: சிறுமலை ஊராட்சிக்குப் போதிய நிதி ஆதாரத்தை அதிகரிக்க சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என நாங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். சிறுமலையில் சுற்றுலா வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது இடப்பிரச்சினை தான்.
வருவாய்த் துறைக்குச் சொந்தமாக போதிய இடங்கள் இல்லை. இதனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, வனத் துறைக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த இடங்களைப் பெற்று சுற்றுலா வளர்ச்சியை மேற்கொள்ளலாம்.
திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.6 கோடிக்கு சிறுமலையின் சுற்றுலா வளர்ச்சிக்குத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதில் பசுமைப் பள்ளதாக்கை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட ஏதுவாக உயர் கோபுரம் அமைத்தல், சிறிய பூங்கா, தங்கும் விடுதிகள், உள்கட்டமைப்பான சாலைகள் சீரமைப்பு, குடிநீர் வசதி ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். ஆனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
தற்போது வனத்துறை சார்பில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிகள் மட்டும் நடைபெறுகிறது. இதற்கு சென்று வரவும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்போது தான் சுற்றுலா வாகனங்கள் அங்கு செல்ல முடியும்.
மேலும் அகஸ்தியர்புரத்தில் சிவன் கோயில், வெள்ளிமலை ஆண்டவர் கோயில் ஆகியவை உள்ளன. இவற்றுக்கும் சென்றுவர சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். தமிழக சுற்றுலாத் துறையின் சுற்றுலா வரைபடத்தில் சிறுமலை உள்ளது. ஆனால் இதை நம்பி இங்கு வருபவர்கள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அனைவரும் தங்கி சிறுமலையின் தென்றல் காற்று, சிறுமலை வாழை உள்ளிட்ட சிறப்புகளை அறிந்து இயற்கை எழிலை ரசித்துச் செல்ல கட்டமைப்புக்களை அரசு உருவாக்க வேண்டும் என்றார்.
திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன் கூறும்போது, அரசுக்கு பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT