Published : 11 Sep 2020 01:14 PM
Last Updated : 11 Sep 2020 01:14 PM
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ராமேசுவரம் அருகே குந்துக்காலில் கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 237 கி.மீ. நீளக் கடற்கரை உள்ளது. இப்பகுயில் உள்ள 180 மீனவக் கிராமங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 4,500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்கச் செல்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்திலேயே அதிக அளவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் அளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பாக் ஜலசந்தி பகுதியில் மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையினரால் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பதை ஊக்குவிப்பதற் காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, ராமேசுவரம் அருகே குந்துக்காலில் ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளம் அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணிகள் 16.6.2018-ல் தொடங்கப்பட்டது. தற்போது 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் 100 சதவீத பணிகள் முடிந்து மீனவர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
இந்த புதிய ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளத்தில் 500 விசைப்படகுகளை நிறுத்தும் வசதியுள்ளது. மேலும், மீன்களை சேமித்து வைக்க குளிர்பதன சேமிப்புக் கிடங்கு, மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
இப்பகுதியில் கடல் அலையால் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் புதிதாக தூண்டில் வளைவு அமைப்பதற்கு ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT