Published : 11 Sep 2020 11:16 AM
Last Updated : 11 Sep 2020 11:16 AM

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதுகாப்புடனும் தைரியத்துடனும் தேர்வு எழுத வேண்டும்; ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், பாதுகாப்புடனும் தைரியத்துடனும் தேர்வு எழுத வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (செப். 11) வெளியிட்ட அறிக்கை:

"அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த எலந்தங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வுக்குத் தயாராகி கொண்டு இருந்த நேரத்தில் தாம் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்கது. வருங்காலங்களில் மாணவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது.

மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் செயல்பட வேண்டும். வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று. வெற்றியை அடைய எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். ஆனால், தன்னம்பிகையை மட்டும் விட்டுவிடக் கூடாது.

வெற்றி பெறுவது ஒன்றே இலக்கு என்று படிக்கும் மாணவர்களை தோல்வி நெருங்காது. பெற்றோர்கள் தங்கள் ஆசைகளை எதிர்கால திட்டங்களை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. அவர்களின் ஆர்வத்தை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தவாறு அவர்களை வழி நடத்தி, கல்வியில் அவர்களை தயார் செய்ய வேண்டும்.

கரோனா காலத்தில் பல அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் பல்வேறு கருத்துகளை வெளியிடலாம். ஆனால், தேர்வை நடத்துவதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கல்வித்துறையினருடையது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பல்துறை வல்லுநர்களின் நுணுக்கமான ஆலோசனைகளையும் கோட்பாடுகளையும் கடைபிடித்து தேசிய கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்டு தற்போது தேர்வு நடைபெற இருக்கிறது.

மாணவர்களே வருகிற செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. தாங்கள் தேர்வு எழுதுவதற்கு நீட் தேர்வாணையம் அறிவித்துள்ள நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அதோடு அவர்கள் அறிவுறுத்தியவாறு முன்னேற்பாட்டுடன் தேவையான பொருள்களை, தேர்வு அனுமதி சீட்டு, முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கடைசி நேர பதற்றத்தையும் அவசரத்தையும் தவிர்த்தால் நன்றாக இருக்கும். தேர்வையும் நிதானமாக வெற்றிகரமாக எழுதி முடிக்க முடியும்.

மாணவர்களே! உங்களுக்கான பிரகாசமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கான எதிர்காலத்தை பாதைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் காலமும் நிறைந்துள்ளது. தங்கள் மனத்தில் உள்ள பயத்தை போக்கி தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். புதிய உலகத்தைப் படைக்க இருக்கும் நீங்கள் அவற்றை தனதாக்கிக்கொள்ள முயலுங்கள். வெற்றி உங்கள் கையில் தவழும். உலகம் உங்களை போற்றும்.

மாணவர்கள் அனைவரும் கரோனா காலத்தில் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் தைரியத்துடனும் தேர்வு எழுத வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x