Published : 01 Sep 2015 03:54 PM
Last Updated : 01 Sep 2015 03:54 PM
வரப்போகும் தீபாவளி எங்களுக்கு சிறப்பாக இருக்காது என்று கருமத்தம்பட்டி, சோமனூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் அன்னூர், கருமத்தம்பட்டி, சோமனூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பவர்லூம் எனப்படும் விசைத்தறித் தொழில் முக்கியமான தொழில்களில் ஒன்றாக நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. சுமார் 2 லட்சம் தொழில்முனைவோர் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள். இவை அனைத்துமே தற்போது தேக்க நிலையில் இருப்பதால் பெரியளவில் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாக இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக சோமனூரில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது:
விசைத்தறி மற்றும் விசைத்தறி நிறுவனங்களுக்கு நூல் வழங்கும் மில்கள் என தொழில்முனைவோர் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோமனூர் பகுதியில் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தொழில் மந்த நிலையில் உள்ளது. விசைத்தறித் தொழில் என்பது நூல் மில் மற்றும் துணி உற்பத்தியாளர்களை நம்பியே உள்ளது. இங்கு தினமும் உற்பத்தியாகும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி ஈரோடு, சென்னை மட்டுமல்லாது, குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் செல்கின்றன.
கடந்த ஓராண்டு காலமாக துணி தேக்கமடைந்து வருகிறது. வடநாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது இங்கேயும் பிரதிபலிக்கிறது. துணியை பிளீச் செய்வதிலும், சாயம் போடுவதிலும் சூழல் பிரச்சினை உள்ளது என்று கூறி இங்குள்ள ஜவுளியை வாங்காமல் சில காலம் வடஇந்திய வியாபாரிகள் தவிர்த்தனர். தற்போது உலக அளவில் ஜவுளி விற்பனை சரிந்து விட்டது என்று கூறி ஜவுளியை வாங்க மறுக்கிறார்கள். ஜவுளி மற்றும் நூலை அதிக நாள் தேக்கி வைக்க முடியாது. அதற்காக உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டி உள்ளது.
தறியை மாதத்தில் 15 நாட்களுக்குத்தான் ஓட்ட முடிகிறது. 24 மணி நேரமும் தறி ஓடினால்தான் தொழில் கட்டுப்படியாகும். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கூட தறியை ஓட்ட முடிவதில்லை. அதுமட்டுமல்லாது ஜவுளி நிறுவனங்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்ததில் இருந்து கூலியையும் குறைத்து விட்டன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து விசைத்தறிகளுக்கு பாவு விநியோகம் செய்யும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: ஜவுளிக் கொள்கையில் மாற்றம் வேண்டும். அப்போது தான் இந்த தொழில் உயிர் பெறும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த விதிமுறைகளே இன்னமும் தொடர்கின்றன. ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு மீட்டருக்கு 2 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. 40 கவுன்ட் நூலை ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.7,750 ஆக குறைத்து பார்த்து விட்டோம். கூலிக்கு நெசவு செய்யும் பவர்லூம் உரிமையாளர்களுக்கு உள்ள கூலியையும் 40 சதவீதம் குறைத்து பார்த்துவிட்டோம். அப்போதும் நஷ்டம் வருகிறது. எனவே, உற்பத்தியை குறைக்க வேண்டி உள்ளது. அது சங்கிலித் தொடர்போல் எல்லாவற்றையும் பாதிக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி எங்களுக்கு சிறப்பாக இருக்காது. இந்தப் பகுதி மக்களிடம் பணப் புழக்கம் இருக்காது. எனவே, தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பவர்லூம் உரிமையாளர்களை அழைத்துப் பேசி தொழிலை மேம்படுத்த யோசிக்க வேண்டும். புதிய விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT