Published : 10 Sep 2020 05:43 PM
Last Updated : 10 Sep 2020 05:43 PM
கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியைத் திறக்கக் கோரும் வணிகர்களின் கோரிக்கை குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ-வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிய கனிகள் மற்றும் பூக்கள் அங்காடிகள், கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் கடந்த மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டன.
பின்னர், மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் தற்காலிகமாக செயல்படத் தொடங்கின.
இந்நிலையில், தமிழக அரசு, சி.எம்.டி.ஏ., வணிகர் சங்கங்கள் ஆகியவற்றின் பேச்சுவார்த்தையின் முடிவில், முதற்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18-ம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28-ம் தேதியும், அதன்பிறகு அடுத்தகட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியைத் திறக்க அனுமதிக்கக் கோரி, சென்னை கோயம்பேடு 4-வது நுழைவுவாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் எம்.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று (செப். 10) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அனுமதித்ததுதான் கரோனா பரவக் காரணமாக இருந்ததாகவும், மொத்த விற்பனையை அனுமதிப்பதில் சிக்கல் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், மொத்த விற்பனை அங்காடியில் கடை வைத்துள்ளவர்களையும், பதிவு செய்துள்ளவர்களையும் விற்பனையில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமென ஆகஸ்ட் 31-ம் தேதி சி.எம்.டி.ஏ-விடம் மனு கொடுத்ததாகவும், 700-க்கு மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சங்கத்தின் விண்ணப்பத்தை ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT