Published : 10 Sep 2020 04:38 PM
Last Updated : 10 Sep 2020 04:38 PM
தமிழக சட்டப்பேரவைக் கூட்ட நாட்களை அதிகப்படுத்த வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வரும் வரும் 14 ஆம் தேதி தொடங்கி, செப். 16-ம் தேதி வரை 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
முதல் நாளில் அண்மையில் காலமான குடியரசு முன்னாள் தலைவர் உள்ளிட்ட மறைந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அலுவல்கள் ஒத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய் தொற்றுப் பரவலைக் காரணமாக்கி பேரவைக் கூட்ட நாட்களைக் குறைத்திருப்பது ஜனநாயக அரசியல் நடைமுறைகளை கடுமையாகப் பாதிக்கும் செயலாகும்.
நீட் தேர்வு, உயர்கல்வி மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு, பள்ளிக் கல்வியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தேசிய கல்விக் கொள்கையால் சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, சிறு, குறு, தொழில்களுக்கு மறு வாழ்வு அளிப்பதன் அவசியம், வேலையின்மை மற்றும் வேலையிழப்பால் உருவாகியுள்ள பிரச்சினைகள், பிரதமர் கிசான் திட்டத்தில் நடந்துள்ள பெரும் நிதி மோசடி, எட்டுவழி பசுமைச் சாலை திட்டம், எண்ணெய் குழாய் பாதை அமைக்கும் திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைப்பது போன்றவற்றால் விவசாய நிலத்திற்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு, ரிசர்வ் வங்கி தமிழகத்திற்கான முன்னுரிமை கடனை மறுத்திருப்பது, இந்தி மொழியைப் பலவந்தமாகத் திணித்து வருவது போன்ற ஏராளமான பிரச்சினைகளை தமிழகம் எதிர்கொண்டுள்ளது.
இவை குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பதும், அவை தொடர்பாக இணக்கமான முடிவுகளை மேற்கொள்வதும் அவசியமாகும். இது பற்றி பேரவைத் தலைவரும், அலுவல் ஆய்வுக்குழுவும் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும்.
சட்டப்பேரவை விதிகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே போதுமானது என்று கருதுவதும், அவசரகதியில் கொள்கை தொடர்புடைய பிரச்சினைகளையும், சட்டம் தொடர்பான மசோதாக்களையும் மொத்தமாக பேரவை நிகழ்ச்சி நிரலில் குவித்து போதிய விவாதமின்றி நிறைவேற்றுவதும் மக்களாட்சி மாண்புக்கு வலு சேர்க்காது.
செப். 14 ஆம் தேதி கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேரவைக் கூட்ட நாட்களையும், அவையின் அலுவல் நேரத்தையும் அதிகப்படுத்த வேண்டும் என பேரவைத் தலைவரையும், அலுவல் ஆய்வுக்குழுவையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT