Published : 10 Sep 2020 02:45 PM
Last Updated : 10 Sep 2020 02:45 PM
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் திருநங்கைகள் சிறப்பு சுய உதவிக்குழுவினரின் பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் மையத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டையில் மகளிர் திட்டத்தின் சார்பில் கனிமம் மற்றும் சுங்கத்துறை நிதியின் மூலம் திருநங்கைகளுக்கான நிலையான வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.4.25 லட்சம் மதிப்பில் திருநங்கைகளின் 'சேலன்ஞ் சிறப்பு சுய உதவிக்குழுவினர்' பாக்குமட்டைகள் தயார் செய்தல் தொழில் மையம் அமைத்துள்ளனர்.
இந்தத் தொழில் மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முநாதன், பி.சின்னப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் தொழில் மையத்தை திறந்து வைத்து பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய முயற்சியாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நோக்கில் மற்ற மாவட்டங்களில் இல்லாத வகையில் நமது மாவட்டத்தில் கனிம வளத்துறையின் மூலமாக ரூ.4.25 லட்சம் கடன் உதவியோடு திருநங்கைகளுக்கு தொழிற்பயிற்சியும் வழங்கி நேரடியாக திருநங்கைகளை மட்டும் கொண்டு செய்கின்ற இந்த தொழில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இந்த பாக்குமட்டை தட்டுகள். இருக்கும். பிளாஸ்டிக் ஒழிப்பை 100 சதவிதம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலே பாக்குமட்டையில் தட்டுகள் தயாரிக்கும் சிறிய தொழில் மையத்தை தொடங்கியிருக்கிறோம்.
இந்த பாக்குமட்டை தட்டுகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் பின்பற்றக்கூடிய வகையில் இது ஒரு முன்னுதாரணமாக அமையும்.
மேலும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு பகுதியில் திருநங்கைகளுக்கு தனியாக தொகுப்பு வீடுகளும், அவர்களை ஒருங்கிணைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமும் ஏற்படுத்தப்பட்டு திருநங்கைகளுக்கான தனிநகராக உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதுவும் தொடங்கி வைக்கப்படவுள்ளது’ என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தார்தன், பொற்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT