Published : 10 Sep 2020 02:53 PM
Last Updated : 10 Sep 2020 02:53 PM
நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை நாட்டை ஆள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மன உளைச்சல் காரணமாக நேற்று (செப். 9) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று (செப்.10) ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நண்பகல் 12 மணிக்கு தொல்.திருமாவளவன் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"விக்னேஷ் மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி, மருத்துவம் படிப்பதற்கு இயலாத நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் மருத்துவக் கனவை நனவாக்க முடியாது என்கிற மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது.
மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவுக்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாட்டை ஆள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுக்கிற வேண்டுகோள். இந்த ஆண்டுக்கு மட்டும் வேண்டாம் என்று இல்லை. இனி எப்போதும் வேண்டாம் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை.
அனிதாவைத் தொடர்ந்து பல மாணவர்களை இழக்கும் நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலை தொடர்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட அதைத் தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டில் தமிழகம் உள்ளதாக முதல்வரே கூறியிருக்கிறார்.
ஏழு மாநில முதல்வர்கள் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு அவ்வாறு வழக்குத் தொடுக்காதது ஏன்? கடுமையாக இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இத்தகைய மரணங்கள் தொடர்வதைத் தடுக்க வேண்டும்.
விக்னேஷ் உயிரிழப்பால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு துக்கத்தில், துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி புரிந்துகொள்ள வேண்டும்.
நீட் தேர்வு இல்லையென்றால் விக்னேஷ் எப்போதோ தனது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவக் கல்வி பெற்றிருப்பார். அவர் மருத்துவம் படிக்க இயலாமைக்கு நீட் தேர்வுதான் காரணம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
விக்னேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
தமிழக அரசு விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க உறுதி அளித்து இருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இழப்பீடு போதாது.
தமிழக அரசு ஏற்கெனவே இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கு அல்லது உயிரிழந்தவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை. விக்னேஷ் குடும்பத்திற்கும் இந்த இழப்பீடு போதாது. எனவே, இதனை 50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள், மருத்துவராக வேண்டும் என்கிற மாயையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். மருத்துவரானால் தான் வாழ்க்கையில் பெரிய கவுரவம் என்றெல்லாம் கருத வேண்டிய அவசியமில்லை. தன்னம்பிக்கை வேண்டும். தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று முதலில் மாணவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தமிழக அரசு இதில் துணிவாக முடிவு எடுக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று துணிச்சலாக அறிவிப்பதில் தமிழக அரசுக்குத் தயக்கம் தேவையில்லை.
மத்திய அரசு நம் மீது திணிக்கிற அனைத்தையும் நெருக்கடிக்கு இடையிலே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழக முதல்வர் பின்வாங்காமல் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT