Published : 10 Sep 2020 11:00 AM
Last Updated : 10 Sep 2020 11:00 AM

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு; வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமான இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இந்தி, சமஸ்கிருத மொழிகளை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை வரையில் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கை-2020 வழி செய்கிறது என்பதால், கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என்று ஒப்புக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசு, பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு துணைபோய்க்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்க மத்திய அரசு உதவித்தொகை வழங்குவதாகவும், தகுதியுள்ள மாணவர்கள் பட்டியல் தயாரித்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான இரண்டு படிவங்களை நிரப்பி, செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் உத்தரவை ஏற்று, அதனை அப்படியே நிறைவேற்றத் துடிக்கிற அதிமுக அரசு, புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள கல்வித் திட்டங்களை வெளிப்படையாகவே நிறைவேற்ற முனைந்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

ஊக்கத்தொகை என்ற பெயரில் நிதி உதவி செய்து, தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை புகுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு அரசு இசைவு அளித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x