Published : 10 Sep 2020 10:55 AM
Last Updated : 10 Sep 2020 10:55 AM
அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில், ஏஐசிடிஇ வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் கலை-அறிவியல், பொறியியல் படிப்புகளில் கடந்த காலங்களில் தோல்வியடைந்த மாணவர்கள், அத்தாள்களை கடந்த மே மாதம் நடைபெறவிருந்த பருவத்தேர்வுகளில் எழுத விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்குத் தேர்ச்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது தவறானது என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ) கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிக்கப்படக் கூடாது என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு கூறுவது எந்த வகையிலும் நியாயமற்ற செயலாகும்.
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்ட போது, ஜூலை மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் போது தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஜூலை மாதத்தில் கல்லூரிகளை திறக்கவோ, தேர்வுகளை நடத்தவோ முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் மே மாதத்தில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று நான் தான் முதலில் வலியுறுத்தினேன்.
ஆனால், இறுதி பருவத் தேர்வுகளை நடத்தாமல் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கக் கூடாது என்பதில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவை உறுதியாக இருந்தன. உச்ச நீதிமன்றமும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டது.
அதனால், இறுதிப் பருவத் தேர்வுத் தவிர மீதமுள்ள பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு கடந்த ஜூலை 23-ம் தேதி அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26-ம் தேதி முதல்வர் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், இறுதிப் பருவத் தேர்வு தவிர, பிற பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத தாள்களை நடப்புப் பருவத்தில் எழுத விண்ணப்பித்து, பணம் செலுத்தி காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இறுதி பருவத் தேர்வுகள் தவிர, அரியர்ஸ் வைத்துள்ள அனைத்துப் பாடங்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படவுள்ளது.
அரியர் பாடங்களுக்குத் தேர்ச்சி வழங்குவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை; எந்தத் தவறும் இல்லை. பல்கலைக்கழக மானியக்குழுவும், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவும் இறுதிப் பருவத் தேர்வுகளில் மட்டும் தான் தேர்வு எழுதாமல் தேர்ச்சி வழங்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தன.
உச்ச நீதிமன்றமும் அதே கருத்தைத் தான் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்புகளின் வழிகாட்டுதல்களைத் தான் தமிழக அரசு பின்பற்றி உள்ளது. இறுதிப் பருவத் தேர்வுகளில் எந்த மாணவருக்கும் தமிழக அரசு தேர்ச்சி வழங்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது தமிழக அரசின் முடிவை ஒழுங்குமுறை அமைப்புகள் எதிர்ப்பதில் அர்த்தமில்லை.
முந்தையத் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களை இப்போது தேர்வே எழுதாமல் வெற்றி பெற்றதை தொழில் நிறுவனங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளாது என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியிருப்பது நியாயமற்றது.
அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு வகுத்த விதிகளின்படி, பொறியியல் படிப்பில் இறுதியாண்டு, இறுதி பருவம் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தான் தேர்ச்சி வழங்கப்படக்கூடாது; மீதமுள்ள பருவங்களில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி வழங்கலாம்.
அதன்படி பார்த்தால் பொறியியல் படிப்பில் முதல் மூன்றாண்டுகளில் பயில்வோருக்கு ஒரு பருவத்திற்கான அனைத்து பாடங்களுக்கும் அவர்கள் தேர்வு எழுதாமல் தான் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் அதே பாடங்களை அரியர்களாக வைத்திருப்போருக்கு தேர்ச்சி வழங்குவதால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது? எனத் தெரியவில்லை.
கரோனா பாதிப்பு ஏற்படாத சூழலில் கடந்த மே மாதம் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தால், அரியர் பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அதைக் கருத்தில் கொண்டு தான் அவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் பாடங்களுக்குத் தேர்ச்சி கூடாது என்றால், அடுத்த தேர்வு வரும் வரை அவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகக் கூடும்; அது அவர்களின் எதிர்கால கற்றல் திறன், தேர்வு முடிவுகள் ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, அரியர் மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான விஷயத்தில் ஏ.ஐ.சி.டி.இ எதிர்ப்பைக் கைவிட வேண்டும்.
மற்றொருபுறம், அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு ஏ.ஐ.சி.டி.இ எந்தக் கடிதமும் எழுதவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை.
இத்தகைய சூழலில், கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT