Published : 10 Sep 2020 09:52 AM
Last Updated : 10 Sep 2020 09:52 AM
தமிழகத்தில் இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்கள் மூலமாகவே குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதால் அந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்து, முறையாக தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட விவசாய சங்கங்களுக்குக் குடிமராமத்துப் பணிகளை ஒதுக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் பலர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி குடிமராமத்துப் பணிகள். பழங்காலத்தில் குடிமராமத்துப் பணிக்காக தண்டோராப் போட்டு வீட்டுக்கு ஒருவரை அனுப்புமாறு அழைக்கப்படுவர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வைகைக் கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வருமாறு பாண்டிய மன்னன் கட்டளையிட்டான். அப்போது மூதாட்டி வந்தியம்மைக்காகக் கூலி ஆள் போல் வந்த இறைவன் சிவபெருமான், அவர் தந்த பிட்டுக்காக மண் சுமந்தார். இந்த திருவிளையாடல் பிட்டுத்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
பழங்காலம் தொட்டு இருந்து வரும் குடிமராமத்துப் பணிகள் தமிழகத்தில் 1975-ல் ஆயக்கட்டுதாரர்களைக் கொண்டு குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என புதுப்பிக்கப்பட்டது.
இப்பணிகளை மேற்கொள்ள மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்படி மேலாண்மைக் குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமராமத்துப் பணியில் நீர்ப்பிடிப்புப் பகுதியின் எல்லை, ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, உள் மற்றும் வரத்துக் கால்வாய்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித் துறை முழுமையான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
நில அளவை மற்றும் கிராம வரைபடத்தின் அடிப்படையில் கால்வாய்களை அடையாளம் காணும் பணியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட வேண்டும். எல்லையை நிர்ணயிக்கும் வரைபடங்களின் படி நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்.
முறைகேடாக நீர்நிலைகளில் பட்டா வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளின் அளவு குறைந்திருந்தால் அதற்குரிய காரணத்தைப் பதிவு செய்ய வேண்டும். நீர்நிலைகளுக்கான நீர்வரத்துத் தடைப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குடிமராமத்துப் பணியில் நீர் நிலைகளின் கரைகளைப் பலப்படுத்த மரக்கன்று நடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இனிவரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்களின் மூலமாகவே குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment