Published : 09 Sep 2020 05:31 PM
Last Updated : 09 Sep 2020 05:31 PM
செப்டம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க இந்தக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம சிகாமணியிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் சுதா, மாவட்டப் பொருளாளர் கருணாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் அய்யனார், என்.சி.எஸ்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வமுருகன், விழுப்புரம் மாவட்டக் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் அறிவியல் இயக்கம் சார்பில் கௌதம சிகாமணியை இன்று கூட்டாகச் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், ''மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ இந்த ஆண்டு முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தக் கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதிப்பைத் தருமெனக் கருதுகிறோம். எனவே, அதுகுறித்து வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
அந்தந்த மாநிலங்களே தங்களுக்குத் தேவையான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கும் அமல்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட கௌதம சிகாமணி, ''புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். இனியும் இதுகுறித்துப் பேச இருக்கிறோம்'' என்று கூறியதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT