Published : 22 Sep 2015 09:25 AM
Last Updated : 22 Sep 2015 09:25 AM
திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என வைகோ அறிவித்ததால் மதிமுகவை உடைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டி ருப்பதாக ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளரும், அக்கட்சியின் ஆட்சிமன்ற குழு செயலாளருமான கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற மதிமுகவின் முடிவு நிர்வாகிகளிடம் சலிப்பை ஏற்படுத்தாதா?
1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நான் திமுக வேட்பாளராக போட்டியிட்டேன். பல கிராமங்களில் ஓட்டு கேட்கவே செல்ல முடியவில்லை. அதுபோல, 1996 தேர்தலில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவே தோற்றார். அமைச்சர்கள் ஓட்டு கேட்ககூட செல்ல முடியவில்லை. அதிமுகவும், திமுகவும் ஊழல் கட்சிகள் என்பதை உணர்ந்து அவர்களை ஒதுக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே, எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்துக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். அதனால் சலிப்பு இல்லை.
கூட்டணி குறித்து வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்ததால்தான் நாங்கள் வெளி யேறினோம் என வெளியேறியவர்கள் கூறுகின்றனரே..?
அனைத்து மாவட்டச் செயலாளர் களுடன் ஆலோசித்த பிறகே எந்தவொரு முக்கிய முடிவுகளையும் வைகோ எடுத்து வருகிறார். எந்த நிலையிலும் அவர் தன்னிச்சையாக முடிவு எடுப்பதில்லை.
பதவி ஆசையால் வெளியேறிய மூவரை தவிர மற்றவர்கள் அனைவரும் கூட்டணி முடிவை ஏற்றுள்ளனர். கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கு மாறாக வைகோ எப்படி முடிவெடுக்க முடியும்.
மதிமுகவை திமுக உடைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
திராவிட கொள்கைகளுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காகவும் போராடும் இயக்கம் மதிமுக மட்டுமே. கூட்டணி சேர்த்து எங்களை அழிக்க திமுக திட்டமிட்டது.
இந்த சதியை உணர்ந்தே திமுக, அதிமுகவோடு கூட்டணி இல்லை என வைகோ அறிவித்தார். இதனால்தான் மதிமுகவை உடைக்க திமுக திட்டமிடுகிறது.
கடந்த மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் கூட்டங்களை கூட்டி நரேந்திர மோடி ஆதரவு திரட்டினார். அதுபோல பேரவைத் தேர்தலுக்கு முன்பு பணத்தை கொடுத்து கூட்டத்தை சேர்த்து மாயையை ஏற்படுத்த ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
கட்சியின் தொடக்க காலம் முதல் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறீர்கள். உங்களை இழுக்க திமுக, அதிமுக போன்ற கட்சிகள் இதுவரை முயற்சி செய்ததில்லையா..?
இதுவரை என்னை யாரும் அணுகி பேசியதில்லை. நான் வருவேன் என்று அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். ஒருவேளை இவர் தேற மாட்டார் என்று விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT