Last Updated : 09 Sep, 2020 04:49 PM

 

Published : 09 Sep 2020 04:49 PM
Last Updated : 09 Sep 2020 04:49 PM

கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் கூடுதல் கடைகள் திறப்பு: காய் கனிகளை ஆர்வமுடன் வாங்கிய வியாபாரிகள், பொதுமக்கள்

கள்ளிக்குடி மத்திய வணிக வளாக நுழைவுவாயில்.

திருச்சி

திருச்சி கள்ளிக்குடியில் கட்டப்பட்ட காய்கறி, பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகத்தில் இன்று திறக்கப்பட்ட 12 கடைகளுடன் மொத்தம் 81 கடைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிலவும் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் மற்றும் காய்கனி கழிவுகளால் நேரிடும் சுகாதாரக் கேடு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் நவீன வசதிகளுடன் 19 வரிசைக் கட்டிடங்களில் 1,000 கடைகள் அடங்கிய காய்கறி, பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டு, 2017, செப்.5-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமியால் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.

தொடர்ந்து, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தரைத்தளத்தில் மட்டும் இரு கடைகளுக்கு நடுவில் இருந்த சுவர் அகற்றப்பட்டு ஒரு கடையாக மாற்றப்பட்டது. இதன்மூலம் தரைத் தளத்தில் இருந்த 500 கடைகள் 330 ஆகக் குறைக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகும் கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்துக்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் செல்லவில்லை. இதனால், 830 கடைகளும் காலியாகவே இருந்து வந்தன.

இதனிடையே, 2018, ஜூன் 30-ம் தேதி மாநில அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கள்ளிக்குடி வணிக வளாகத்தில் சில வியாபாரிகளைக் கொண்டு விற்பனையைத் தொடங்கிவைத்தனர். ஆனால், எதிர்பார்த்த வியாபாரம் ஆகாததால் சில மாதங்களிலேயே அந்த வியாபாரிகளும் காந்தி மார்க்கெட் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில், கடைகளைத் தங்களுக்கு ஒதுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று 207 கடைகள் விவசாயிகளுக்கும், 623 கடைகள் வியாபாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டன.

இதனிடையே, கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தை திறக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்ட மனித வளர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கென குளிர்ப்பதன கிடங்கு அருகே விவசாயிகளுக்கென இ5, இ6 பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட 207 கடைகளில், 52 குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட 104 கடைகளில் முதல் கட்டமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் ஆர்வலர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட சில கடைகள் ஆக.5-ம் தேதி திறக்கப்பட்டன. தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மேலும் சிலர் தங்கள் கடைகளைத் திறந்தனர். இந்தநிலையில், இன்று 12 பேர் தங்கள் கடைகளைத் திறந்தனர்.

இதன்மூலம் மத்திய வணிக வளாகத்தில் பி4, சி4, இ 5, 6, 7 ஆகிய வரிசைக் கட்டிடங்களில் உள்ள 81 கடைகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கடைகள் திறக்கப்பட்ட தகவலறிந்து 100-க்கும் அதிகமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காய் கனிகளை வாங்கிச் சென்றனர்.

மத்திய வணிக வளாகத்தில் அடுத்த வாரம் மேலும் சில கடைகள் திறக்கப்படவுள்ளதாக வேளாண் விற்பனை அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x