Published : 09 Sep 2020 03:55 PM
Last Updated : 09 Sep 2020 03:55 PM
"தமிழ்நாட்டில் ஏறக்குறைய 60 ஆண்டுகளாக நடைபெறும் திராவிட ஆட்சியில் இந்தி மொழியை மட்டுமல்ல தமிழையும் சேர்த்து ஒழித்திருக்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது" என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
"நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவர் கட்சி ஆரம்பித்த பின்பு, என்ன கொள்கைகளை கொண்டிருக்கிறார், எதை முன்னிறுத்தி அரசியல் பயணத்தை துவங்குகிறார் என்பதை வைத்து தான் மற்ற விஷயங்களை சொல்லமுடியும்.
ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது, வருவேன் என்று சொல்வதே தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அவர் கட்சி ஆரம்பித்துவிட்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இப்போதே கற்பனை செய்து கண்ணீர்விட ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தெரிகிறது.
அரசியலில் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என சாதித்துக் காட்டியவர் விஜயகாந்த். அதே நம்பிக்கை அவரது மனைவி பிரேமலதாவிடம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
பாஜக இப்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. கன்னியாகுமரி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் நிச்சயமாக பாஜக வேட்பாளர் இருப்பார்.
ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்தி மொழியை ஒழித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் ஒழித்தது இந்தி மொழியை மட்டும்தானா அல்லது தமிழையும் சேர்த்து ஒழித்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் இரட்டைக் கொலையை அவர்கள் செய்திருக்கிறார்கள். தமிழையும் சேர்த்து தான் கொன்றிருக்கிறார்கள்.
தமிழை உயிராக மதிக்கக்கூடிய தமிழர்கள் மத்தியில் தமிழின் உணர்வை ஏற்படுத்தி, உலகத்தில் எந்தப் பகுதியில் இரண்டு தமிழர்கள் சந்தித்தாலும் கூட தமிழைத் தவிர மற்றொரு மொழியில் பேசமாட்டேன் என்ற வைராக்கியம் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா.
தமிழ்நாட்டிலேயே திருமண அழைப்பிதழ் போன்றவை அச்சிடும் போது என் தாய்மொழி தமிழில் தான் அச்சிடுவேன் என்ற வைராக்கியத்தை உருவாக்கியிருக்கிறார்களா?
தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஏற்பாடையாவது செய்திருக்கிறார்களா. இதை எதையுமே செய்யாமல், தமிழே படிக்காமல் யுகேஜி முதல் பிஎச்டி வரை படிக்க முடியும் என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்கியது யார்.
முறைப்படி ஓர் அரசாங்கம் தன் குடிமக்களுக்கு தமிழை சரியான முறையில் பயிற்றுவித்திருந்தால் நம் மாணவர்கள் தமிழிலே உறுதியாக நின்றிருப்பார்கள்.
எந்த கொம்பனாலும், இந்தி மட்டும் அல்ல எந்த மொழிகளாலும் தமிழை அசைக்க முடியாது என்ற நிலையோடு தமிழன் உயர்ந்து நின்று கொண்டிருப்பான்.
இவ்வளவு கேவலமான நிலைக்கு தமிழனைத் தள்ளியது கடந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சி முறையாகும் என்றார் அவர்.
தொடர்ந்து 'இந்தி தெரியாது போடா' என்ற டி-சர்ட் டிரென்டிங் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, 'எங்களுக்கு தெரியும் போடா' என்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இன்று எழுச்சியுடன் பேச ஆரம்பித்து விட்டார்கள். 'எங்களுக்குத் தெரியும் போடா, நீ என்ன சொல்லித் தருவது' எனக் கூறும் நிலை உருவாகியிருக்கிறது"
இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT