Published : 09 Sep 2020 01:15 PM
Last Updated : 09 Sep 2020 01:15 PM
திமுக பொதுக்குழு இன்று காலை திட்டமிட்டபடி காணொலிக் காட்சி மூலம் கூடியது. இதில் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்குப் போட்டியின்றித் தேர்வும், 3 ஆக இருந்த துணைப் பொதுச் செயலாளர் பதவிகள் 5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. காலியாகும் பதவிகளில் இனி யாரை நியமிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
திமுகவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பொதுக்குழுக் கூட்டமாகும். திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பொதுக்குழு மூலமே தேர்வு செய்யப்படுவர். மற்ற பதவிகளை பொதுச் செயலாளர், தலைவர் பேசி நியமனம் செய்வர்.
திமுக தலைவர் கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி மறைந்தார். அதன் பின்னர் முறைப்படி பொதுக்குழு மூலம் ஸ்டாலின் திமுக தலைவரானார். பொருளாளர் பதவிக்குத் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். துரைமுருகன் வகித்துவந்த முதன்மைச் செயலர் பதவி டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டது.
வயோதிகம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார். இதையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்குத் தகுதியான நபரை நியமிக்கும் பணி திமுக முன் நின்றது.
இதே நேரம் திருச்சி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட, திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை வகித்த டி.ஆர்.பாலு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக மட்டுமே இருந்தார். இந்நிலையில் பொதுச் செயலாளர் பொறுப்புக்குத் துரைமுருகன் போட்டியிடுவதால், பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
பொருளாளர் பதவிக்கு பலரது பெயர் அடிபட்ட நிலையில் டி.ஆர்.பாலு அப்பதவிக்கு விண்ணப்பித்தார். துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த வி.பி.துரைசாமி ராஜ்யசபா பதவி கிடைக்காத விரக்தியில் பாஜகவில் இணைந்ததால் அந்தியூர் செல்வராஜ் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ள நிலையில் அந்தியூர் செல்வராஜும் சேர்த்து 3 துணைப்பொதுச் செயலாளர்கள் திமுகவில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு காணொலி வாயிலாகக் கூடியது. இதில் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக முறைப்படி தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவில் கூடுதலாக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியில் சீனியர் என்பதால் க.பொன்முடிக்கும், தொடர்ந்து கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆ.ராசாவுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. இருவரும் துணைப் பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்,. இதன்மூலம் முன்னர் இருந்த 3 துணைப் பொதுச் செயலாளர்கள் (அதில் ஒருவர் பெண், ஒருவர் பட்டியலினம்) இனி 5 ஆக இருக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி காலியாகிறது. அதற்கு கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் திருச்சி சிவா நியமிக்கப்படலாம் என்கின்றனர். இதேபோன்று பொன்முடி துணைப் பொதுச் செயலாளர் ஆனதால் காலியாக உள்ள விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் புதிதாக இணைந்த லட்சுமணன், பொன்முடி ஆதரவாளரான புகழேந்தி மற்றும் முகையூர் சிவா போன்றோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
இன்று கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலப் பிரச்சினை காரணமாக, சொந்த ஊரிலிருந்தே கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அவரது இடத்தில் பூங்கோதை ஆலடி அருணாவை நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுதவிர நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் பதவியிலும் மாற்றம் வரலாம் என்கிற பேச்சும் திமுக வட்டாரத்தில் அடிபடுகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை எதிர்ப்பு, மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT