Published : 09 Sep 2020 12:39 PM
Last Updated : 09 Sep 2020 12:39 PM

கரோனா பேரிடர் நிர்வாகத்தில் அதிமுக அரசு படுதோல்வி: திமுக பொதுக்குழு கண்டனம்

பொதுக்குழுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்.

சென்னை

கரோனா பேரிடர் நிர்வாகத்தில் அதிமுக அரசு படுதோல்வியடைந்துவிட்டதாக, திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 9) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

"பேரிடர் காலத்திலும் சீரிய முறையில் உழைக்கும் திமுக தலைவர், திமுக தொண்டர்கள், தன்னார்வலர்கள், மனிதநேயப் பண்பாளர்கள், அனைவருக்கும் பாராட்டம் வணக்கமும்!

அனைத்து முனைகளிலும் மக்களைப் பாதிக்கும் அதிமுக அரசு மற்றும் மத்திய பாஜக அரசு ஆகியவற்றின் பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து முதலில் குரல் கொடுத்து, திமுகவின் கூட்டணிக் கட்சிகளுடன் உரிய முறையில் ஆலோசனை நடத்தி, கரோனா காலத்தில் இதுவரை 104 காணொலிக் காட்சிகள் மூலம் 8,529 பேரிடம் விவாதித்து, குறிப்பாக, 92 காணொலிக் காட்சிகள் மூலம் எல்லா நிலைகளிலும் உள்ள 7,714 திமுக நிர்வாகிகளுடன் உரையாடி, பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு; வல்லுநர்களின் வழிகாட்டுதல்களைப் பெற்று; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசாதாரணமான இந்தப் பேரிடர் காலத்திலும் சாதாரண காலத்தில் உழைப்பதைப் போல், ஓயாது உழைத்து வருகிறார்.

திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், திமுக தலைவரின் அறிவுரைகளையொட்டி ஆற்றிவரும் மக்கள் பணிகள், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு உதவும் கரங்களாகத் திகழ்ந்திடும் செயல்பாடுகள் பொறுப்புள்ள எதிர்க்கட்சிக்கு மிகச்சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறது என்பதையும், இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக விளங்குகிறது என்பதையும், இப்பொதுக்குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

கரோனா பேரிடர் காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதன் மூலம், ஒரு கோடிப் பேருக்கும் மேல் பட்டினி போக்கி, பசித்த வாய்க்கு உணவளிப்போம் என்ற உயர்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவுக்கரம் நீட்டியது அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும் விதத்தில் அமைந்தது.

பேரிடர் காலத்தில், ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசு, மக்களின் துன்பங்களைத் துடைப்பதில் தோல்வியடைந்த நிலையில், 'இதோ நான் இருக்கிறேன்' என்று முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் முன்னணியில் நின்று மறக்க முடியாத மனிதநேயத்துடன் ஆற்றிய மக்கள் பணிக்கு இந்தப் பொதுக்குழு இதயபூர்வமான பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

திமுக தலைவரின் இந்த சீரிய முயற்சிகளுக்கு மிகச் சிறப்பாக உதவிசெய்த சமூக சேவகர்களுக்கும், சமூகநல அமைப்புகளுக்கும், கட்சி சாராத, நேசக்கரம் நீட்டிய நிறைகுடப் பண்பாளர்களுக்கும், கடமை உணர்வோடு களத்தில் நின்று பணிபுரிந்த திமுக தொண்டர்களுக்கும் இந்தப் பொதுக்குழு நன்றியும், வணக்கமும் தெரிவித்துக் கொள்கிறது.

தங்கள் உயிரைத் துச்சமென மதித்து நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு இந்தப் பொதுக்குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா பேரிடர் நிர்வாகத்தில் படுதோல்வியடைந்த அதிமுக அரசுக்குக் கண்டனம்!

கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க இயலாமல், ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் போதும், நிர்வாக ரீதியாகத் தோல்வியடைந்து, மக்களுக்குப் பெரிதும் தேவையான நிதி நிவாரணம் வழங்கிட சிறிதும் அக்கறையற்ற அதிமுக அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய 5,000 ரூபாய் நேரடிப் பண உதவியைக் கூட வழங்காமல், நோய்த் தொற்று மற்றும் அதனால் ஏற்படும் இறப்புக் கணக்குகளை மறைத்தும், குறைத்தும் திரித்தும் வெளியிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் வேலை இழப்புக்கும், வருமான இழப்புக்கும் வித்திட்டு, அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஏராளமான அல்லல்களுக்கு ஆளாக்கியது அதிமுக அரசு.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் வீழ்ச்சியைச் சந்தித்து, ஒட்டுமொத்த சென்னை மாநகரத்தின் பெரும்பகுதி மக்கள் சொந்த மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் குடிபெயரும் சூழ்நிலையை உருவாக்கி, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், அதிமுக அரசு அவ்வப்போது பிறப்பித்த ஊரடங்கினால் மக்கள் வேதனைத் தீயில் புழுவாகத் துடித்துத் துவண்டு போனார்கள்.

இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு, கரோனா டெண்டர்களில் முறைகேடு, அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகள் முதல் முகக்கவசங்கள், பிளீச்சிங் பவுடர் வாங்குவது, கிருமி நாசினி மற்றும் கரோனா தடுப்புத் தகரங்கள், சவுக்குக் கட்டைகள், பூட்டுகள், கயிறுகள் ஆகியவற்றை வாங்குவது வரை அனைத்திலும் முறைகேடு, கரோனா நோயாளிகளுக்கு அளிக்கும் உணவுகளில், உதவிகளில் முறைகேடு என கோரப் பேயாட்டம் போட்ட கரோனா ஊழல் தமிழகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது.

கரோனா பேரிடரில் முன்களப் பணியாளர்களாக நின்றவர்களுக்கு அறிவித்த 2 லட்சம் ரூபாய் வழங்காமல், பணியில் உயிர்த்தியாகம் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி, வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்காமல், வெற்று அறிவிப்புகளிலும், வீண் சவடால்களிலும் கால விரயம் செய்து; இந்தியாவிலேயே அதிமுக அரசு போல் கரோனா நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்த அரசு வேறு எதுவும் இருக்க முடியாது என்ற அளவுக்கு, செயலற்ற அரசை நடத்தி வருகிறார் தமிழக முதல்வர்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார, தொழில் வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள அதிமுக அரசுக்கு இந்தப் பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், கரோனா பேரிடர் ஊழல்களில் திளைத்த அமைச்சர்களும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டபூர்வமாகப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் என்று எச்சரித்திடவும் கடமைப்பட்டுள்ளது".

இத்தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x