Published : 09 Sep 2020 12:06 PM
Last Updated : 09 Sep 2020 12:06 PM
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திமுக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 9) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
"போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர்க்கும், துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள க.பொன்முடி - ஆ. ராசா ஆகியோர்க்கும் வரவேற்பும், வாழ்த்தும்!
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கைத் தடம் பற்றி வளர்ந்த, திமுகவின் மூத்த முன்னோடி துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராக, ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு தனது வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
பள்ளிப் பருவத்தில் போர்க்குணம் கொண்டவர். சத்தியவாணிமுத்துவை அழைத்து கிளைக் கழகம் தொடக்கி, அக்கிளைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்றவர். பச்சையப்பன் கல்லூரி தந்த திராவிட இயக்கப் பண்பாட்டுச் செயல்வீரர், சென்னை அனைத்துக் கல்லூரிகள் தமிழ் மன்றத் தலைவர், திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின்போது 1963-ல் எம்.ஜி.ஆர் மூலம் கருணாநிதிக்கு அறிமுகமாகி, 1965 இந்தி எதிர்ப்புப் போரில் முதலில் கைதான மாணவர் தலைவர், அண்ணாவுடன் சிறைவாசம், மிசாவில் ஒரு வருடம் சிறைவாசம், 9 முறை சட்டப்பேரவை உறுப்பினர், திமுகவில் தணிக்கைக்குழு உறுப்பினர், மாணவர் அணிச் செயலாளர், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர், திமுக பொருளாளர் என பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட கொள்கைக் கருவூலம் துரைமுருகன், பொதுப் பணித்துறை அமைச்சராக, தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து சிறப்புறச் செயலாற்றியவர்.
'கருணாநிதியிடமிருந்து அணுவளவும் விலகாமல் அருகிலேயே இருந்து சேவகம் செய்யும் ஒரு சீடனைப் போல் தொடர்ந்து இருந்து வருவதுதான் நான் பெற்ற பேறு' என்றும், 'அன்றும், இன்றும், என்றும் கருணாநிதியின் பாசறையில் வளர்ந்த கட்டுப்பாடான சுயமரியாதை வீரன்' என்றும், தனது கோட்பாடாக, கொள்கை உறுதிப்பாடாக நிலைநிறுத்தி, மக்கள் பேரியக்கமான திமுகவுக்கு அயராது பணியாற்றி வரும் அவர், இன்றைக்கு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருப்பவர். தமிழக சட்டப்பேரவையில், திமுகவின் 'இடி மின்னல் மழை'யில் ஒருவராக, இந்த இயக்கத்திற்கு அருந்தொண்டாற்றி வரும் அவர், திமுகவின் பொதுச்செயலாளராக, முன்னெப்போதும் போல், திமுக தலைவருக்கு உற்ற துணையாகவும், உணர்வு மிக்க உடன் பிறப்பாகவும் இருந்து, எந்நாளும் கட்சிப் பணியாற்றிட இந்தப் பொதுக்குழு இதயபூர்வமாக வாழ்த்தி மகிழ்ச்சி கொள்கிறது.
திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு 1957-ல் திமுக உறுப்பினராகி, பகுதிப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் என்று படிப்படியாய், பல்வேறு பொறுப்புகளை வகித்து, பம்பரம் போல் சுழன்று பணியாற்றி, 1974-ல் திமுகவின் சென்னை மாவட்ட துணைச் செயலாளரானவர். மிசா நெருக்கடி காலத்தில் கருணாநிதியின் ஒட்டுநராகவே பணியாற்றியவர். மிசாவில் கைதாகி சிறை சென்றவர். 1983 முதல் 1992 வரை சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர்.
பாரம்பரியம் மிக்க திமுக குடும்பத்தைச் சேர்ந்த அவர், தென்சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1986 முதல் 1992 வரை மாநிலங்களவை திமுக உறுப்பினராகப் பணியாற்றி, நாடாளுமன்ற மற்றும் துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் திமுகவின் கருத்துகளைத் திறம்பட எடுத்து வைத்தவர். சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சராகப் பணியாற்றி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்.
தமிழகத்திற்கு கருணாநிதியின் வழிகாட்டுதலின் பேரில் அண்ணாவின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப் பாடுபட்டவர். அவரது பெயர் கூறும் பூகோள அடையாளங்கள் நிரம்ப உண்டு. அதிமுக ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, காணப் பொறுக்காமல் கொதிப்படைந்து, மத்திய அமைச்சர் என்றும் கருதாமல், துணிச்சலுடன் நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, மறைந்த முரசொலி மாறனுடன் கைதான அவர் ஆவேசம் நிறைந்த போராட்ட குணத்திற்குச் சொந்தக்காரர். திமுகவின் சென்னை மாவட்டத் தளபதியாக விளங்கியவர், திமுக தலைவரின் தளபதியாக, முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி, தற்போது நாடாளுமன்ற திமுக குழுவின் தலைவராக இருக்கும் அவர், திமுக பொருளாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு கூறி, பாராட்டுதலைத் தெரிவித்து, அவரது அயராத கட்சிப் பணி இன்றுபோல் என்றென்றும் இனிதே தொடர்ந்திட இந்தப் பொதுக்குழு இதயபூர்வமாக வாழ்த்தி மகிழ்கிறது".
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT