Published : 09 Sep 2020 09:39 AM
Last Updated : 09 Sep 2020 09:39 AM

சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்: குப்பை அகற்றும் பணிகள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன் தினம் போராட்டம் நடத்திய மாநகராட்சி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சென்னை புரசைவாக்கம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது போராட்டம் 2-வது நாளாக அங்கு தொடர்வதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.படம்: ம.பிரபு

சென்னை

உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கக் கோரி போராட்டம் நடத்தியபோது, கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட இடத்தில் சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னையில் குப்பை அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரத்து 725 ஊதியம் வழங்ககடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை ரிப்பன் மாளிகையை 3 ஆயிரம் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் தொழிலாளர்களை கைது செய்து பாரிமுனையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். பின்னர், மாலை அங்கிருந்து வெளியேற மறுத்து தொடர்ந்து மாநகராட்சி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக 3 ஆயிரம் மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து செங்கொடி சங்கத்தின் நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாக துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டம் வாபஸ்

இதுதொடர்பாக, செங்கொடி சங்கத்தின் துணை பொது செயலாளர் தேவராஜ் கூறும்போது, “பேச்சுவார்த்தையில் தற்போதைய சூழலில் ஊதிய உயர்வை அமல்படுத்துவதில் நிலவும் சிக்கல்களை எடுத்துரைத்து போராட்டத்தை கைவிடும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். சென்னை மாநகராட்சியின் நிதி நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்" என்றார்.

இதற்கிடையே, துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்பத்தூர், தண்டையார்பேட்டை உட்பட சென்னையின் ஒரு சில பகுதிகளில் குப்பை அகற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், சென்னையின் ஒரு சில பகுதிகளில் உள்ள தெருக்களில் குப்பைகள் தேங்கி இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x