Published : 09 Sep 2020 09:34 AM
Last Updated : 09 Sep 2020 09:34 AM
திமுகவில் பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
திமுகவில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கியப் பதவி இல்லையா என்று தலைப்பிட்டு ‘இந்து தமிழ்திசை' நாளிதழில் செப்டம்பர் 8-ம்தேதி வெளியான கட்டுரை சிறிதும் ஏற்புடையதல்ல. பட்டியல் இனத்தவருக்கு அரசியலில் உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் கருணாநிதி.
திமுகவில் கிளை, ஒன்றியம், பகுதி, மாவட்டம் என எல்லா நிலைகளிலும் பட்டியலினத்தவர் ஒருவர்கட்டாயமாகத் துணைச் செயலாளராக இருக்க வேண்டும் என்று கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவந்தார். கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பையும் வழங்கினார்.
ஆட்சியிலும், கட்சியிலும், பட்டியலினத்தவருக்கான உரிமைகளை பரிபூரணமாக வழங்கும் ஒரே கட்சி திமுக. 1999-ல்மத்திய ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,2004-ல் மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பையும் திமுகதான் எனக்கு வழங்கியது.
சத்தியவாணி முத்து, பரிதிஇளம்வழுதி, வி.பி.துரைசாமி ஆகியோரை திமுக எப்போதும் நிராகரித்ததில்லை. அவர்களுக்கு உரிய பொறுப்பும், மரியாதையும் வழங்கப்பட்டுதான் இருந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக, அபிலாசைகளுக்காக வேறு இயக்கத்துக்குச் செல்வது அவர்களின் தனி உரிமை. அதையே பொதுவான அளவுகோலாக வைத்து திமுகவின் சமூகநீதியில் குறைகாண்பது நியாயமல்ல.
மு.க.ஸ்டாலின் கருணாநிதி வழியில் சமூக நீதியைப் பின்பற்றி வருகிறார். கடந்த தேர்தலில் அவர்அமைத்த சமூக நீதி கூட்டணியால் நாடாளுமன்றத்தை இன்று பட்டியலின எம்.பி.க்கள் அலங்கரிக்கின்றனர். எனவே, திமுகவை பட்டியலின மக்களுக்கு எதிரானதாக கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT