Published : 08 Sep 2020 02:03 PM
Last Updated : 08 Sep 2020 02:03 PM
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள்மீது இந்தியைத் திணிப்பதா என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (செப். 8) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய அரசு அதிகாரிகள்மீது கடுமையான வேகத்தில் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தி தெரியாத அதிகாரிகளுக்கு அன்றாட நடவடிக்கைகளில் பெரும் இடர்ப்பாடு ஏற்பட்டு வருகிறது.
மத்திய அரசு அதிகாரியின் கடிதம்
இது தொடர்பாக ஜி.எஸ்.டி. உதவி ஆணையர் அந்தத் துறைத் தலைவருக்கு எழுதிய கடிதம் வெளிவந்துள்ளது. மத்திய அரசின் கோப்புகள் இந்தியில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயத்தால், மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இந்தியில் எழுதும் கோப்பினை, இந்தி தெரியாத ஆங்கிலமும், தமிழும் மட்டும் தெரிந்த அதிகாரிகளுக்கு அனுப்பும்போது மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது என்பது ஜி.எஸ்.டி. உதவி கமிஷனரின் அனுபவ ரீதியான கடிதத்தின் மூலம் தெளிவாகிறது.
நிர்வாகச் சிக்கல் ஏற்படாதா?
இந்தி தெரியாத அதிகாரிகள், இந்தி தெரிந்த குமாஸ்தாக்களை வைத்துக் கொண்டு ஒரு நிர்வாகம் இயங்க முடியுமா? கண்களை மூடிக்கொண்டு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தால், நிலைமை விபரீதம் ஆகாதா?
நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டாலும் பரவாயில்லை, இந்தியில்தான் மத்திய அரசு அலுவலக நடவடிக்கைகள் அமைந்தே தீரவேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் கண்மூடித்தனம் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு துறைகளில் பணியாற்றுவோருக்குக் கட்டாயம் தமிழ் தெரிய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் தமிழும், ஆங்கிலமும் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்; தமிழ்நாடு அரசும் இதில் கவனமும், அக்கறையும் செலுத்த வேண்டும்; மத்திய அரசு அலுவலகங்களாக அவை இயங்குவது தமிழ்நாட்டில்தானே.
இந்த நிலை நடைமுறைக்கு வந்தால், இந்தி மட்டுமே தெரிந்த வட மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டில் பணியாற்றத் தயங்குவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மட்டுமே, ஆட்சி மொழி, அலுவலக மொழி என்று சட்ட ரீதியாக ஆகிவிட்ட பிறகு, இதில் மத்திய அரசு வேண்டுமென்றே மூக்கை நுழைப்பது அப்பட்டமான அத்துமீறிய செயலாகும்.
தமிழ்நாடு தனித்தன்மையானது!
மற்ற மற்ற மாநிலங்கள் எப்படியோ இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆளும் அரசாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, 'இந்திக்கு இங்கு வேலை இல்லை' என்பதில் திட்டவட்டமாகவே இருக்கிறார்கள்.
அண்மையில் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு இந்தி தெரியாது என்பது தொடர்பாக விமான நிலைய அதிகாரி தெரிவித்த கருத்து, இந்திய அளவில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியது.
இந்தி பிரச்சினையில் மத்திய அரசு மூர்க்கத்தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்ததால், தமிழ்நாட்டில் கலைத்துறையைச் சேர்ந்தவர்களின், 'இந்தி தெரியாது - போடா' என்ற தலைப்பிலான 'ஹேஷ்டேக்' ட்விட்டர் டிரெண்டில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. 'இந்தி தெரியாது போடா' என்று எழுதப்பட்ட பனியன்களையும் அணிய முற்பட்டுவிட்டனர்.
இப்படியெல்லாம் பனியன்கள் போட்டு அலைவதன் மூலம் தமிழை வளர்க்க முடியுமா என்று சிலர் உளறுகின்றனர், இது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரும் நிலை ஏற்படப் போவது உண்மை! போகப் போகத் தெரிந்துகொள்வார்கள்.
இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளை எடுத்துக்கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புறப்பட்டு இருப்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தற்கொலை ஒப்பந்தமாகும்.
மத்திய அரசின் கவனத்திற்கு...
தமிழ்நாட்டின் இந்த வீச்சு இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாநிலங்களிலும் பரவினால் அந்த நிலை இந்தியாவைக் கேள்விக் குறியாக்கிவிடாதா?
தேசிய கல்வி திட்டமானாலும், ஆட்சி மொழி அலுவல் மொழி பிரச்சினையாக இருந்தாலும் சரி, இந்தியா பன்மொழிகளைக் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பதை மறந்து செயல்படுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்"
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT