Published : 08 Sep 2020 12:47 PM
Last Updated : 08 Sep 2020 12:47 PM
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் முன்பு மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "அனிதா, பிரதீபா, ஹர்ஷிதா ஆகியோர் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியின்போது தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை. ஆனால், இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சியில் தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஒரு உயிர் பலியாகிறது. ஏற்கெனவே நடைபெற்றது போல 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளாலும் மாணவர்கள் தற்கொலை தொடர்கிறது. ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT