Published : 08 Sep 2020 11:58 AM
Last Updated : 08 Sep 2020 11:58 AM

அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்: கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்; தமிழக அரசு மீது ஸ்டாலின் விமர்சனம்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கபட நாடகம் ஆடி, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 8) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத சூழலில், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ’அரியர்ஸ்’ தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தேர்வுக் கட்டணம்தான் அளவுகோல் என்றால், ஊரடங்கால் தேர்வுக் கட்டணத் தேதிக்கான காலக்கெடுவைத் தவறவிட்ட மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதை எடுத்துரைத்து, கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தேன்.

எதைச் செய்தாலும் அவசரம் அவசரமாக செய்து, சம்பந்தப்பட்டவர்களைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கி வரும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இப்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது.

'அரியர்ஸ்' தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதற்குப் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் இடம் தராது எனக் கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் இதனை ஏற்கவில்லை எனத் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அந்தச் செய்தியை மறுத்த அத்துறைக்குச் சம்பந்தமேயில்லாத அமைச்சர் டி.ஜெயக்குமார், அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் விதிமுறைப்படிதான் தேர்ச்சி பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

அதிமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலிடமிருந்து எந்தக் கடிதமும் அரசுக்கு வரவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குக் கடிதம் வந்திருந்தால், கவுன்சிலுக்கு அவர் என்ன பதில் கடிதம் எழுதுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்றும், தெரிவித்திருந்தார்.

அதிமுக அமைச்சர்களின் இத்தகைய முரண்பாடான, குழப்பங்கள் நிறைந்த அறிக்கைகள் வெளியாகி, மாணவர்களைப் பதற்றத்திற்குள்ளாக்கிய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், 'இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் முந்தையப் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்குத் தேர்வின்றித் தேர்ச்சி என்கிற அறிவிப்பு ஆச்சரியமளிக்கிறது; தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அளிக்காமல் தேர்ச்சி என்பது ஏற்க இயலாதது; அத்தகைய மாணவர்கள், உயர் படிப்பில் மற்ற பல்கலைக்கழகங்களால் ஏற்கப்படமாட்டார்கள். தொழில்நிறுவனங்களும் அவர்களின் தகுதியை ஏற்காது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் இந்தக் கடிதம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து, அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் குறித்து கல்வியாளர்களிடம் உரிய ஆலோசனைகள் பெற்று, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து பழனிசாமி அரசு செயல்படுகிறதா, அல்லது சுயநலமான காரணங்களுக்காக, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க, கபடநாடகம் ஆடுகிறதா என்ற பொருத்தமான கேள்வி, பெற்றோர், மாணவர், கல்வியாளர் ஆகியோர் மனதில் எழுந்துள்ளது.

ஊரடங்கால் வழக்கமான பள்ளி, கல்லூரி படிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு, ஆன்லைன் வகுப்புகள் ஆகியவை மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கி, அவர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைக்கின்றன. இவற்றைக் கண்டித்து, மாணவ சமுதாயத்தின் நலன் காத்திடத் திமுகவின் இளைஞரணியும், மாணவரணியும் இணைந்து இன்றைய தினம் போராட்டக் களம் கண்டு முழக்கங்கள் எழுப்பி ஆள்வோரின் செவிப்பறைகளைத் தட்டியுள்ளன.

இந்நிலையில், நிலையில், மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்காமல், கல்லூரி மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, நியாயமான, தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டிட வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x