Published : 08 Sep 2020 11:26 AM
Last Updated : 08 Sep 2020 11:26 AM

ஓசூர் - சேலம் இடையே அரசுப் பேருந்துகள் இன்றி 3 மணி நேரம் அவதிப்பட்ட பயணிகள்

ஓசூர் பேருந்து நிலையத்தில் சேலம் வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கக்கோரி நேரம் காப்பாளரை முற்றுகையிட்ட பயணிகள். படம்: ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் வழித்தடத்தில் காலை 9 மணிவரை அரசுப் பேருந்துகள் இயக்கப் படாததால், பயணிகள் முற்றுகையிட்டனர்.

ஓசூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கிடையே அரசுப் பேருந்துகள் நேற்று முதல் இயங்க தொடங்கின. நீண்ட நாட்களுக்கு பிறகு மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கப்பட்டதால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் அதிகாலையில் இருந்தே ஓசூர் பேருந்து நிலையத்துக்கு வந்தனர்.

வெளிமாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் சேலம் வழித்தடத்தில் மட்டும் காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்து காலை 8.35 மணியளவில் நேரம் காப்பாளரை முற்றுகையிட்டு, சேலம் வழித்தடத்தில் அரசுக் பேருந்துகளை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சேலத்தில் இருந்து 5 பேருந்துகள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் ஓசூர் வந்து விடும். மேலும் முதல் நாள் என்பதால் ஓட்டுநரும், நடத்துநரும் பணியில் உடனடியாக இணைவதில் சிரமம் உள்ளது.

சிறிது நேரத்தில் சேலம் வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்று பேருந்து நிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர் காலை 9.30 மணியளவில் தருமபுரி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் சேலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக சேலம் செல்வதற்காக காத்திருந்த பெங்களூரைச் சேர்ந்த பயணி மணி (60) கூறியதாவது, பெங்களூரு நகரில் இருந்து சேலம் செல்வதற்காக, கர்நாடகா பேருந்தில் அத்திப்பள்ளி வந்து, அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து தமிழக எல்லையான ஜுஜுவாடியில் தமிழக அரசுப் பேருந்தில் பயணித்து ஓசூர் வந்திருக்கிறோம். இங்கு 3 மணி நேரம் காத்திருந்தும் சேலம் பேருந்து வரவில்லை.

அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் உரிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை. கரோனா காலகட்டத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருப்பது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x