Published : 08 Sep 2020 10:39 AM
Last Updated : 08 Sep 2020 10:39 AM

கவின்கலை மாணவர்களுக்கு தவறான வரலாறு கற்பிக்கப்படக் கூடாது; பாடத்திட்டத்தை மாற்றுக; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

கவின்கலை மாணவர்களுக்கு தவறான வரலாறு கற்பிக்கப்படக் கூடாது எனவும், அதன் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 8) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்களில் தேவையற்ற பாடங்கள் திணிக்கப்படுவதாகவும், ஓவியத்துறை வல்லுநர்கள் தொடர்பான பாடத்தில் தகுதியான ஓவியர்கள் குறித்த வரலாறு புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கவின்கலைக்கு சற்றும் தொடர்பில்லாதவர்களால் தவறான வரலாறு வலிந்து திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சென்னையில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரி தான் இந்தியாவில் கவின்கலைக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி ஆகும். 1850-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 170 ஆண்டுகள் பழமையான இக்கல்லூரி உலக அளவில் புகழ்பெற்ற ஓவியர்களையும், சிற்பிகளையும் உருவாக்கியது ஆகும்.

ஆனால், இப்போது அந்தக் கல்லூரிக்கான பாடத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட வேண்டிய அம்சங்களை சேர்த்தும், சேர்க்கப்பட வேண்டிய ஆளுமைகளைப் புறக்கணித்தும் தவறான வரலாற்றை மாணவர்களுக்கு புகட்ட முயற்சிகள் நடப்பது வேதனை அளிக்கிறது.

முதுநிலை கவின்கலை படிப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், மூன்றாம் பருவத்திற்கான எழுத்துத் தேர்வுகளில் இந்திய நவீனக் கலையின் வரலாறு என்ற தாள் இடம் பெற்றுள்ளது. அந்தத் தாளில் மொத்தம் 5 பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

மும்பை, கொல்கத்தா, லக்னோ ஆகிய ஓவியப் பள்ளிகளைப் பற்றி குறிப்பிடும் போது, அந்த மாநிலங்களைச் சேர்ந்த தலைசிறந்த ஓவிய ஆளுமைகள் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வரலாறுகளும், பணிகளும் கவின்கலை பயிலும் மாணவர்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டியது ஆகும்.

அந்த வகையில் ஓவியப் பள்ளிகள் தொடர்பான பாடங்களில் அந்த ஆளுமைகள் குறித்த வரலாறுகள் சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும்.

அதேநேரத்தில், தமிழ்நாடு ஓவியப் பள்ளிகள் என்ற தலைப்பிலான பாடத்தில் தமிழகத்தின் கலைச் சிறப்பை உலகுக்கு அறியச் செய்த ஓவிய ஆளுமைகள் குறித்த வரலாறுகள் சேர்க்கப்படவில்லை. மாறாக, கதைகள், செய்திகள் ஆகியவற்றை விளக்குவதற்கான ஓவியங்களை வரைவதில் வல்லமை பெற்ற ஓவியர்கள் குறித்த வரலாறு சேர்க்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த துறைகளில் வித்தகர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், கவின்கலை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் அல்ல.

செய்திகளையும், கதைகளையும் ஓவியங்களின் மூலம் விளக்குவதற்கும், ஓவியம் மூலம் செய்திகளையும், சிந்தனைகளையும் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இவற்றில் இரண்டாவது வகை சார்ந்த வரலாறு தான் கவின்கலை மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டியதாகும்.

சென்னை கவின்கலைக் கல்லூரியில் பயின்ற கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால், எல்.முனுசாமி, ஏ.பி.சந்தான ராஜ், கன்னியப்பன், ஆதிமூலம், அருள்தாஸ் உள்ளிட்ட ஏராளமான ஆளுமைகள் ஓவியக்கலையில் சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவிலும், உலக அளவிலும் ஓவிய வளர்ச்சிக்காக பங்களித்திருக்கின்றனர்.

தமிழ்நாடு ஓவிய ஆளுமைகள் என்றால் இவர்களின் பெயர்கள் தான் நினைவுக்கு வரும். இவர்களின் வரலாறு தான் கவின்கலை மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் முதல்வரை வேந்தராகக் கொண்டு செயல்படும் ஒரே பல்கலைக்கழகம் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் ஆகும். அத்தகைய பல்கலை.யின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கல்லூரி தவறான வரலாற்றுக்கு துணை போய்விடக் கூடாது; தமிழ்நாடு ஓவியப்பள்ளி பாடம் திருத்தப்பட வேண்டும்.

அதேபோல், மூன்றாம் பருவத்திற்கான செய்முறைத் தேர்வில், நாட்டிய முத்திரைகள் மற்றும் நாட்டியத்தைக் காட்சிப்படுத்துதல் என்ற பாடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது. ஓவியத்திற்குள் நடனத்தையும், இசையையும் திணிப்பது தவறான முன்னுதாரமாக அமைவது மட்டுமின்றி, அவர்களின் ஆராய்ச்சி திசை மாறிச் செல்வதற்கும் வழிவகுத்து விடும். இது ஓவியக்கலைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

எந்த ஒரு பாடத்திற்கான பாடத்திட்டமும் அதில் வல்லமை பெற்றவர்களால் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், ஓவியம் உள்ளிட்ட கவின்கலையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தியும், தொல்லியல் துறையின் தலைவர் பாலாஜியும் இணைந்து புதியப் பாடத்திட்டத்தை தயாரித்தது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும்.

எனவே, பல்கலைக்கழக வேந்தராகிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், இணை வேந்தராகிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனும் இதில் தலையிட்டு பாடத்திட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்த ஆணையிட வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x