Published : 08 Sep 2020 08:53 AM
Last Updated : 08 Sep 2020 08:53 AM
இந்தி மொழி தெரியாத தனக்கு, இந்தி பிரிவில் பணி ஒதுக்கியதன் மூலம், தன் மீது இந்தி திணிப்பு செய்யப்பட்டுள்ளதாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உதவி ஆணையர் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சென்னை அண்ணாநகரில் உள்ள ஜிஎஸ்டி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பா.பாலமுருகன், மத்திய மறைமுக வரி மற்றும்சுங்க வரி வாரிய தலைவருக்கு, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் சென்னையில் உள்ளஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில், திறன் வளர்ப்பு மற்றும் இந்தி (அலுவல் மொழி) பிரிவில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வருகிறேன்.
இந்திப் பிரிவின் பணியானது, மத்திய அலுவல்மொழியாக இந்தியைப் பரப்புவதும், அதன் உபயோகத்தைக் கண்காணிப்பதும் ஆகும்.
இப்பிரிவில் கோப்புகளில் எழுதப்படும் குறிப்புகள் இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்பது சட்டவிதி. எனக்கு இந்தி தெரியாததால், அந்தக் கோப்புகளில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாமல் கையெழுத்திடுவது வழக்கம். அத்துடன், கோப்புகள் மற்றும் கடிதங்களையும் என்னால் இந்தியில் எழுத முடியாது.
ஆணையர் அலுவலகத்தில் பணியில் உள்ள, இந்தியை தாய்மொழியாக கொண்ட ஒரு உதவி ஆணையருக்கு இந்திப் பிரிவை ஒதுக்காமல் எனக்கு ஒதுக்கியது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும். இந்தி தெரியாத எனக்கு அப்பணியை கொடுப்பது, என் மீது இந்தி மொழியை திணிப்பதாக கருதுகிறேன்.
எனவே, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளிலும், இந்திப் பிரிவுக்கு இந்தி எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் அந்தப் பிரிவில் வேலை செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT