Published : 08 Sep 2020 08:50 AM
Last Updated : 08 Sep 2020 08:50 AM
பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு ஆகியோர் தெரிவித்தனர்.
திருவாரூரில் நேற்று அமைச்சர் காமராஜ், கூறியதாவது: பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் சிரமமின்றி பயனடைய வேண்டும் என்பதற்காக எளிய வழிமுறையைத் தந்துள்ளது. இதில் பயனடைய விரும்பும் தகுதியுடையவர்கள் நேரடியாகவே அவர்களின் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இதை சிலர் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்த பட்டியலை மாநிலஅரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதில் விவசாயிகள் அல்லாதவர்களை கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்குவதுடன் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது என்றார்.
தஞ்சாவூரில் நேற்று வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு கூறியது: பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சேலம் மாவட்டத்தில்
பிரதமர் கிசான் நிதி உதவித் திட்டத்தில் மோசடியாக இணைந்து பணம் பெற்றவர்களில் சேலம் மாவமாவட்டத்தில் முதல்கட்டமாக 10,700 பேரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியபோது, “விவசாயிகள் அல்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 1,600 பேர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கி, இத்திட்டத்தின்கீழ் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள பணத்தை வசூலிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் தலைமையில் முழுமையாக ஆய்வு நடக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT