Published : 07 Sep 2020 07:55 PM
Last Updated : 07 Sep 2020 07:55 PM
பிரதமர் எவ்விதக் கவுரவமும் பார்க்காமல் 13-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று திறந்த கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''கரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பல இடங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவதற்கு வாகன வசதி இல்லாத நிலையில், பிரதமர் எவ்விதக் கவுரவமும் பார்க்காமல் 13-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
தற்போது சமையல் எரிவாயுவுக்குக் கொடுக்கின்ற மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். தொடர்ந்து மானியம் தரவேண்டும். கரோனா தொற்று இருப்பதால், அதனை ஒழிக்க நாங்கள் முழு கவனம் செலுத்துகிறோம். ஆனால், ராஜ்நிவாசில் அமர்ந்து கொண்டு வெளியே வராமலும், மக்களைச் சந்திக்காமலும் அதிகாரிகளை வசைபாடுவதும், வாட்ஸ்அப்பில் பேசி அதிகாரிகளின் நேரத்தை வீணாக்குவதும் ஆளுநரின் வேலையாக உள்ளது. ராஜ்நிவாசில் அமர்ந்து கொண்டு கட்டளையிடும் வேலையை ஆளுநர் விட்டுவிட வேண்டும். மத்திய அரசுக்கு அவர் தவறான தகவலை அனுப்புகிறார்.
கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த ரூ.200 கோடி வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். ஆளுநர் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு ரூ.3 கோடி மட்டும் கொடுத்து விட்டு தன்னுடைய கடமையை முடித்து கொண்டது. மாநில நிதியிலிருந்தும், முதல்வர் கரோனா நிதியிலிருந்தும் தொற்றைத் தடுத்து நிறுத்த பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தரவும், மீனவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தியும் அனுப்பிய கோப்புகளை ஆளுநர் கிரண்பேடி திருப்பி அனுப்பி விட்டு தன்னிடம் கோப்பில்லை என்று நாடகம் ஆடக் கூடாது. நியமிக்கப்பட்ட ஒருவர் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட்டுக் கோப்புகளை திரும்பி அனுப்பி நாடகம் ஆடுவது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இனிமேல் திறந்த கடிதம் எழுதும் வேலையை கிரண்பேடி விட்டுவிட வேண்டும். அவர் எழுதிய கடித்தில் உள்ள அனைத்துக் கருத்துகளும் உண்மைக்கு புறம்பானவை. முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ உத்தரவு போடுகின்ற அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. முதல்வர், அமைச்சர்கள் கூறுகின்ற அறிவுரைப்படி ஆளுநர் நடக்க வேண்டுமே தவிர, அறிவுரை கூறுகின்ற தகுதி ஆளுநருக்கு இல்லை''.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT