Published : 07 Sep 2020 06:06 PM
Last Updated : 07 Sep 2020 06:06 PM

நீலகிரிக்குள் செப். 9 முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி; 6 மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலா நடவடிக்கைகள்

பல வண்ண மலர்களுடன் பச்சை பசேலென காட்சியளிக்கும் உதகை தாவரவியல் பூங்கா.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களுக்கு இ-பாஸ் மூலமாக சுற்றுலாப் பயணிகள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது கரோனா அச்சுறுத்தலால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சுற்றுலா நடவடிக்கைள் முழுவதுமாக முடக்கப்பட்டன. இதனால், சுற்றுலாவை நம்பியிருந்த கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என அத்துறையை சார்ந்தவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை (செப். 9) முதல் சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று (செப். 7) கூறும் போது, "சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்ல இ-பாஸ் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்காக இ-பாஸ் விண்ணப்பத்தில் 'சுற்றுலாப் பயணிகள்' என்று விண்ணப்பிக்கலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்கள் மட்டும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் திறக்கப்படும். அவற்றில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இ-பாஸ் பெற்று லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கலாம்.

ஆனால், தினமும் குறிப்பிட்ட அளவிலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும். மாவட்டத்துக்குள் வருபவர்கள் அனைருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால், சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி பிறந்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x