Published : 07 Sep 2020 03:52 PM
Last Updated : 07 Sep 2020 03:52 PM
அறிவையும், ஒழுக்கத்தையும் வாழ்வுக்கு வழங்குவதே கல்வியின் பயன் என, மாநில பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 14 பேருக்கு, ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப். 7) விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.வளர்மதி பேசும்போது, "ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வி மட்டுமே. அறிவையும், ஒழுக்கத்தையும் வாழ்வுக்கு வழங்குவதே கல்வியின் பயன். கல்வியே மனிதனை முழுமையாக்கும். எதிர்கால தலைவர்களாகிய மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள்தான்" என்றார்.
அமைச்சர் என்.நடராஜன் பேசுகையில், "பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு, தமிழ்நாடு முதல்வரால் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. எனவேதான், நல்ல மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள், பெற்றோருக்கு அடுத்த நிலையில் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். பல்வேறு சூழல்களில் இருந்து வரும் மாணவர்களை பக்குவப்படுத்தி சமுதாயத்துக்குத் தேவையான உறுப்பினர்களாக மாற்றும் பெருமை ஆசிரியர்களிடம் உண்டு.
கரோனா பாதித்துள்ள இந்த இக்கட்டான காலக்கட்டத்திலும் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளைத் தயாரிப்பதிலும், அதை ஒருங்கிணைப்பதிலும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது" என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோ.பாரதி விவேகானந்தன் (திருச்சி), சி.செல்வி (முசிறி), கூ.சண்முகம் (லால்குடி), பெ.ஜெகநாதன் (மணப்பாறை) (பொறுப்பு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற ஆசிரியர்கள்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ம.அன்புச்செல்வன், துலையாநத்தம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் மு.மு.க.ஹரிஹர ராமச்சந்திரன், சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் (தமிழ்) இ.சுகிர்தா பாய், அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அ.முகம்மது பாரூக், சாவித்ரி வித்யசாலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தி.சு.உஷா, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கி.வெங்கடேஷ், இ.ஆர். மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் வை.ராமகிருஷ்ணன், டிஇஎல்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் து.சுகந்தி டெய்சிராணி, தாராநல்லூர் அலங்கவிலாஸ் சிங்காரப் பிள்ளை நினைவு மானிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கே.பி.உதயராணி, கைலாசபுரம் பெல் தமிழ் பயிற்று மொழி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் வி.தமிழ்செல்வி, முகவனூர் புனித செசீலியா தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜா.எமல்டா ராணி, உப்பிலியபுரம் மானிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் இரா.மகேஸ்வரி, ஜெயங்கொண்டான் மானிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பா.தமிழ்செல்வி, விமான நிலைய ஆதம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரிபா அப்துல்லா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT