Published : 07 Sep 2020 02:28 PM
Last Updated : 07 Sep 2020 02:28 PM
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை விலை உயர்வால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பசுந்தேயிலைக்கு ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயிக்க வலியுறுத்தி உள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருமானம் ஈட்டுகின்றனர்.
விலை வீழ்ச்சி
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ தேயிலைக்கு ரூ.25 வரை கிடைத்தது. அதனை தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.12 வரை மட்டுமே கிடைத்து வந்தது. இதனால் தேயிலை விவசாயிகளுக்குத் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதையடுத்து ஏராளமான தேயிலை விவசாயிகள் தேயிலை சாகுபடியை கைவிட்டு மலை காய்கறி சாகுபடிக்கு மாறினர்.
இந்நிலையில், அசாம் மற்றும் வட மாநிலங்களில் தற்போது கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை விலை உயர்ந்துள்ளது.
தேயிலை வாரியம் இந்த மாதத்துக்கான பசுந்தேயிலை சராசரி விலை கிலாவுக்கு ரூ.27.06 ஆகவும், இண்ட்கோ சர்வ் கிலோவுக்கு ரூ.28 என விலை நிர்ணயம் செய்துள்ளன.
இதில் 'ஏ' கிரேடு தேயிலைக்கு ரூ.32 முதல் ரூ.35 வரையிலும், 'பி' கிரேடு தேயிலைக்கு ரூ.31முதல் ரூ.32 வரையிலும், சாதாரண தேயிலையின் விலை ரூ.28 முதல் ரூ.29 வரையிலும் அதிகரித்துள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பின் நல்ல விலை கிடைத்துள்ளதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்
இந்நிலையில், பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறும் போது, "நீலகிரி தேயிலைக்கு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது சந்தையில் தேயிலைக்கு விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் இண்ட்கோ தொழிற்சாலை உறுப்பினர்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும், மத்திய, மாநில அரசுக்கு பசுந்தேயிலைக்கு ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயிக்க வேண்டும்.
தேயிலைக்காக பிரத்யேகமாக நிதியம் அமைத்து, அதன் மூலம் சந்தையில் விலை குறையும் போது, விவசாயிகளுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT