Published : 07 Sep 2020 02:03 PM
Last Updated : 07 Sep 2020 02:03 PM
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை - 2020-ஐ வெளியிட்டார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 7) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"மின்னணு உற்பத்தியில், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 16% ஆகும். மேலும், கணினி, மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பொருட்கள் உற்பத்தியில், அகில இந்திய அளவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
கைப்பேசி உற்பத்தி, கணினி மற்றும் அதன் புற உபகரணங்கள், தொழில்துறைக்குத் தேவையான மின்னணு பொருட்கள், நுகர்வோர் மின்னணு மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் போன்ற பொருட்களின் உற்பத்திக்கு வலுவான தளமாக தமிழ்நாடு விளங்குகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம் வரையில் உள்ள மின்னணுவியல் உற்பத்தி தடத்தில், சாம்சங், ஃபிளெக்ஸ்டிரானிக்ஸ் (Flextronics), டெல் (DELL), பாக்ஸ்கான், பி.ஒய்.டி. (BYD), சால்காம்ப், சான்மினா, நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை நிறுவி உள்ளன.
தற்போது உள்ள முதன்மை நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மின்னணுவியல் துறையில் புதிய திட்டங்களை ஈர்த்திடவும், இதுவரை இந்தியாவில் இல்லாத செமி கண்டக்டர் புனையமைப்பு (Semi conductor Fabrication) மற்றும் மின்னணு பழுது பார்த்திடும் பூங்காக்கள் துறைகளில், தமிழ்நாடு தடம் பதித்திடவும் 'தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை - 2020' அவசியம் ஆகும்.
மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் நோக்கங்கள்
- 2025-ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியினை, 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துதல்
- இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்களிப்பினை 25% ஆக உயர்த்துதல்
- செமிகண்டக்டர் புனையமைப்பு துறையினை தமிழ்நாட்டில் வளர்த்தல்
- 2024 ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டில் மின்னணு வன்பொருள் உற்பத்தித் துறையின் மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு லட்சம் நபர்களுக்குத் திறன் பயிற்சி அளித்தல்
- கைப்பேசிகள், எல்.இ.டி (LED) தயாரிப்புகள், ஃபேப்லெஸ் (Fabless) சிப் வடிவமைப்புகள், பி.சி.பி.க்கள் (PCB), சோலார் போட்டோவோல்டெய்க் (Solar Photovoltaic) செல்கள், மருத்துவ மின்னணுவியல் மற்றும் மோட்டார் வாகன மின்னணுவியல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் மதிப்புக் கூட்ட அளவினை கணிசமாக அதிகரித்தல்
- மேற்கூறிய நோக்கங்களை அடைவதற்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் சூழலை மேம்படுத்துதல்
- மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ESDM) புத்தொழில் (start-ups) தொழிலகங்களுக்கான உகந்த சூழலினை வளர்த்தல்; குறிப்பாக வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள புத்தாக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியினை ஊக்குவித்தல்
மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
இந்த மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கை, மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில், முதலீடு செய்ய முனைவோருக்கு, கீழ்க்கண்ட நிதிச் சலுகைகளை வழங்குகிறது:-
1. முதலீட்டுத் தொகையில் 30% வரை மூலதன மானியம்
2. நில குத்தகைக்கான மானியம், தொழில் ரீதியாக பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் திட்டங்களை செயல்படுத்துபவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் வாங்கும் செலவில் 50% மானியம்
3. நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் காலக் கடன்களுக்கு அதிகபட்சமாக 5% வரை வட்டி மானியம்
4. மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தொழிலகங்கள் வாங்கும் நிலங்களுக்கு, 50% முதல் 100% வரை முத்திரைத் தீர்வைகளுக்கு விலக்களிப்பு
5. முதன் முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, 6 மாத காலங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம், பெண் ஊழியர்களுக்கு, 6 மாத காலங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம்
6. 5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு
7. அறிவுசார் மூலதனம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரச் சான்றளிப்பு மானியம், காப்புரிமை விண்ணப்பங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை 50% மானியம். மேலும், தரச் சான்றிதழ்களுக்கு, ஒரு நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் வரை, 50% மானியம்
8. சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மானியம் மற்றும் நடைமுறையில் உள்ள தொழில் கொள்கை 2014-ன்படி இதர சலுகைகள்
9. பெரிய முதலீடுகள் அல்லது, அதிகமதிப்பு கூட்டல் / வேலைவாய்ப்பு / சிறந்த தொழில் சூழலை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்ட முதலீடுகளுக்கு, சிறப்பு தொகுப்பு சலுகை வழங்கப்படும்
பிற சலுகைகள்
1. ஒவ்வொரு இ.எம்.சி-யிலும் (EMC) தனியார் துறையுடன் இணைந்து, ஒரு திறன் மற்றும் பயிற்சி மையம் நிறுவப்படும். ஒரு லட்சம் நபர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
2. மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையங்களின் அருகில், தொழிலகங்களில் பணிபுரிவோருக்கு குடியிருப்பு திட்டங்களை உருவாக்குதல்
3. தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், புத்தாக்க மானியங்கள், புத்தொழில் மானியங்கள் மற்றும் விதை மூலதனம் போன்ற சலுகைகள் மூலம், புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல்
4. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு, இரட்டை நகர ஒப்பந்தங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொது வசதி மையங்கள் மற்றும் மின்னணு சோதனை மையங்களை விரிவாக்குதல்
5. பொருத்தமான சூழலை உருவாக்கி, ஃபேப் (Fab) துறையை ஊக்குவிக்க ஒரு பணிக்குழு அமைக்கப்படும். ஃபேப் துறையில் முதலீடு செய்வோருக்கு சிறப்பு தொகுப்புச் சலுகைகள் வழங்கப்படும்.
6. மின்னணு பழுது பார்க்கும் பூங்காக்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கான வசதிகள் அமைக்கப்படும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT