Published : 07 Sep 2020 11:09 AM
Last Updated : 07 Sep 2020 11:09 AM

கேசவானந்த பாரதி மறைவு: அடிப்படை உரிமைகளைப் போற்றிப் பாதுகாக்கத் துணை நின்றவர்; ஸ்டாலின் இரங்கல்

கேசவானந்த பாரதி: கோப்புப்படம்

சென்னை

கேரளத்தைச் சேர்ந்த மடாதிபதி கேசவானந்த பாரதி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமைகள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மனுதாரரும் கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதியுமான கேசவானந்த பாரதி இன்று (செப். 7) உடல்நலக்குறைவால் காலமானார்.

சுவாசக்கோளாறு மற்றும் இதயக்கோளாறு காரணமாக மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 80.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை விழுமியங்களைப் (Basic Structure of the Constitution) பாதுகாப்பதற்குப் பெரிதும் காரணமாக இருக்கும் வழக்கினைத் தொடுத்தவரான கேசவானந்த பாரதி இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி துயரத்தை அளிக்கிறது.

ஸ்டாலின்: கோப்புப்படம்

கேரளாவில் நிலச் சீர்திருத்த சட்டங்கள் தொடர்பாக கேசவானந்த பாரதி தொடர்ந்த ஒரு வழக்கு, உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு, 13 நீதிபதிகளைக் கொண்ட மாபெரும் அரசியல் சட்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மையினைக் கொண்டு, அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்குக் கடிவாளம் போட்ட அந்த வழக்கின் தீர்ப்பு; இன்றுவரை 'கேசவானந்த பாரதி' வழக்கு என்றே வரலாற்றில் புகழ்ப் பெயர் பெற்று நிலைத்துள்ளது.

1973-ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்புதான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான; மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் இவற்றைப் பாதுகாப்பதற்கான வாளும் கேடயமுமாக விளங்குகிறது.

மக்களாட்சி எனும் மலைக்கோட்டையின் மதில்களைக் காத்து உறுதிப்படுத்துவதற்குக் காரணமான வழக்கைத் தொடுத்து, இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் போற்றிப் பாதுகாக்கத் துணை நின்ற கேசவானந்த பாரதியின் மறைவுக்குத் திமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x