Published : 07 Sep 2020 10:24 AM
Last Updated : 07 Sep 2020 10:24 AM
வீட்டுக்கடன் பெறும் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் வங்கிகள் மாற்றான்தாய் மனப்பான்மையோடு இல்லாமல் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (செப். 7) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா பாதிப்பால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும். அவர்களுக்குக் கடனை திருப்பி செலுத்த நீண்ட கால அவகாசம் அளிக்க வேண்டும்.
வீட்டுவசதிக் கடன் அளிக்கும் நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வட்டி விகிதங்கள் மாறும்போது கடன்பெற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரியாமலே கூடுதலாக வசூலித்து விடுகின்றன. வங்கிகளின் நுணுக்கமான நடைமுறைகளை அறியாத வாடிக்கையாளர்கள் இதுபோன்ற செயல்களால் மிகப் பெரிய அளிவில் பாதிக்கப்படுகின்றனர்.
வட்டிக்குறைக்கப்படும் நேரங்களில் வாடிக்கையாளர்களை அணுகி அவர்களின் விருப்பங்களை அறியும் நடைமுறை வங்கிகளால் பின்பற்றப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் வட்டிக்குறைப்பு சலுகைகளை பெறுவதற்கு வங்கியை அணுகினால் அவர்களோ, அவர்களுக்கு பல்வேறு விதங்களில் கூடுதல் கட்டணங்களை விதிக்கின்றனர். இது வாடிக்கையாளர்களை மிகவும் பாதிக்கின்றது.
வீட்டுக்கடன் வழங்கும்போது கடன் பெறும் வாடிக்கையாளர்களை வங்கிகள் இரண்டு வகையான வட்டிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு கோருகின்றனர். அதாவது, எந்த காலத்திற்கும் மாறாத நிரந்தர வட்டி விகிதம் அடுத்தது நெகிழ்வு வட்டி விகிதம் என்பதாகும். இதில், நெகிழ்வு வட்டி தேர்ந்தெடுத்தவர்களுக்கு அடிக்கடி நிபந்தனைகள் விதிப்பதும் கூடுதல் வட்டி வசூல் செய்வதும் வழக்கமாக இருக்கின்றது. வங்கியின் நிபந்தனைகள் நடைமுறைகளை தெளிவாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காமல் பிரச்சினை வரும்போது விளக்குவது வங்கிகளின் தொடரும் நடைமுறையாக இருக்கின்றது. இது சரியான முன்னுதாரணமாகாது.
ஆகவே, வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் நிலையறிந்து அவர்களை முறையாக வழிநடத்தி, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நடவடிக்கையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் நலமாக இருந்தால் தான் வங்கிகள் வளமாக திகழமுடியும். ஆகவே, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இந்த கரோனா காலத்திலும் சங்கடமான நேரத்திலும் மாற்றான்தாய் மனப்பான்மையோடு இல்லாமல், மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT