Last Updated : 07 Sep, 2020 10:05 AM

 

Published : 07 Sep 2020 10:05 AM
Last Updated : 07 Sep 2020 10:05 AM

கோவையில் வீட்டுக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு; 6 பேர் மீட்பு; மற்றவர்களை மீட்கும் பணி தீவிரம் 

விபத்தில் சிக்கியவர்களை மீீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைைப்புத் துறையினர். படம் ஜெ.மனோகரன்.

கோவை

கோவை செட்டி வீதி அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கோவை பேரூர் பிரதான சாலை, செட்டிவீதி அருகேயுள்ள கே.சி.தோட்டம் பகுதியில் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. இங்கு முதல் தளத்தில் கண்ணன், அவரது மனைவி ஸ்வேதா என்ற ஷாலினி, குழந்தை தன்வீர் (5), கண்ணனின் தாய் வனஜா (65), கண்ணனின் தங்கை கவிதா (46) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

தரைத்தளத்தில் பாபு, சரோஜினி (70) உட்பட 3 பேர் வசிக்கின்றனர். இந்த கட்டிடம் சற்று பழுதடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கோவையில் மாலை நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று (செப். 6) மாலையும் மழை பெய்தது.

தொடர் மழையால் நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் மேற்கண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தின் சுவர்கள் பழுதடைந்து, தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.

இதில் கண்ணன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், தரைத்தளத்தில் வசித்து வந்தவர்கள், பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்த கோபாலசாமி (72), கஸ்தூரி (65), மணிகண்டன் (42) ஆகிய 3 பேர் என 9-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த கோவை தெற்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆட்சியர் கு.ராசாமணி, காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர்.

இதில் ஸ்வேதா (25), கோபாலசாமி (72) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். தன்வீர், வனஜா, மனோஜ் (47), மணிகண்டன், கவிதா, சரோஜினி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கஸ்தூரி உள்ளிட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x