Published : 07 Sep 2020 08:54 AM
Last Updated : 07 Sep 2020 08:54 AM
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியம், நுரையீரலில் பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
தஞ்சாவூரில் உள்ள தென்னக பண்பாட்டு மைய இயக்குநராக பணியாற்றியவர் எம்.பாலசுப்பிரமணியம்(63). கேரளாவில் 1957 ஆகஸ்ட்19-ல் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. மிருதங்கத்தில் கணபிரவீணா, எம்.பில் பட்டம் பெற்ற இவர், கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள செம்மை அரசு இசைக்கல்லூரி உள்ளிட்ட சில இசைக் கல்லூரிகளில் முதல்வராகவும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறை டீனாகவும் பணியாற்றியுள்ளார்.
செம்மங்குடி சீனிவாச ஐயர், பேராசிரியர் நாராயணசாமி, ஜெயராமன், மாண்டலின் னிவாஸ், புல்லாங்குழல் ரமணி மற்றும் பல்வேறு இசை கலைஞர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
இந்நிலையில், இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் செப். 2-ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கரோனா தொற்று இல்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அவரது தங்கையின் மருமகன் சேது மாதவன் முன்னிலையில் மாநகராட்சி மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஆளுநர் இரங்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், “எம்.பாலசுப்பிரமணியத்தின் திடீர் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். நமது கலாச்சாரங்களை பேணி காப்பதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்தவர். அவரது மறைவு கலையுலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
பாலசுப்பிரமணியம் மறைவுக்கு மத்திய கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT