Published : 07 Sep 2020 08:22 AM
Last Updated : 07 Sep 2020 08:22 AM
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே, தனியார் அசைவ உணவகத்தில் கடந்த 3-ம் தேதி இரவு கோழி இறைச்சி உணவருந்திய சிலருக்கு திடீரென கடுமையான வயிற்றுப்போக்கும் வாந்தி மயக்கமும் ஏற்பட்டு, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்டோர் உணவருந்திய உணவகத்தில், உணவு தயாரிக்குமிடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகக் கூறி உணவகத்துக்கு பூட்டுப்போட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 26 பேர் உடல் நலம்பெற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில், பிள்ளையார் பாளையம், ஒற்றைவாடைத் தெருவைச் சேர்ந்த முருகன் (25) சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவருடன் உணவருந்திய இருவர், தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
உரிமையாளருக்கு நோட்டீஸ்
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது:
உணவகத்தில் இருந்த கோழி இறைச்சி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி, உணவக உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். முடிவுகள் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உணவு நஞ்சாகி உயிரிழந்ததாக கூறப்படும் முருகன், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என அனுமதிக்கப்பட்டதாக பதிவேட்டில் இல்லை. இருப்பினும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT