Published : 06 Sep 2020 09:29 PM
Last Updated : 06 Sep 2020 09:29 PM
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அதிமுகவே வெற்றிபெறும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.
திருச்சி கருமண்டபத்தில் இன்று கருமண்டபம் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பகுதிச் செயலாளர் ஆர்.ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அதிமுகவே கட்டாயம் வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசைக் குற்றம் சொல்லியே பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு மக்கள் மன்றம் நல்ல முடிவை அறிவிப்பார்கள்” என்றார்.
முன்னதாக, கூட்டத்தில் அமைச்சர் நடராஜன் பேசியதாவது:
''அதிமுகவில் சாதாரணமானவர்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அப்படித்தான் செயல்பட்டனர். அவர்களைப் போலவே முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் சாதாரணமானவர்களும் பெரிய பதவிக்கு வர முடியும். ஆனால், திமுகவில் சாதாரணமானவர்கள் எம்எல்ஏ, அமைச்சர், முதல்வராக முடியுமா என்று சவால் விடுகிறேன்.
அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் வழியில், ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம் என்று கூறி தேர்தல் களத்தைச் சந்திப்போம். ஆனால், கருணாநிதி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் கருணாநிதி அரசை நிறுவுவோம் என்று திமுக சொல்ல முடியுமா?. மக்கள் மன்றம் அதை ஏற்றுக்கொள்ளுமா?. ஏனெனில், ஊழலுக்காக களைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான்.
அண்ணா உண்மையான திமுகவைக் கண்டார். ஆனால், மு.கருணாநிதி அதை தனது குடும்பச் சொத்தாக மாற்றினார். எனவேதான், அண்ணா பெயரில் அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினார்.
நல்ல பல திட்டங்களை அளித்ததாலேயே எம்ஜிஆர் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தார். அவரைப் போலவே எம்ஜிஆரின் சாதனையை முறியடித்து தொடர்ச்சியாக ஜெயலலிதாவும் ஆட்சியில் அமர்ந்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக அழிந்தது என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடுவார் என்றும் பலரும் கனவு கண்டனர்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை முதல்வர் கே.பழனிசாமி அளித்து வருகிறார். முதல்வர் கே.பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு வளமாக உள்ளது. எந்நேரமும் மேட்டூர் அணை நிரம்பியவாறே உள்ளது. அதேபோல், முதல்வரின் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பால், முதல்வர் பழனிசாமியை மனிதக் கடவுள் என்று மாணவர்கள் பாராட்டுகின்றனர். கட்சியின் இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையில் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர்.
வரும் தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக நினைத்து கட்சியினர் செயல்பட வேண்டும். அதிமுகவின் வெற்றியை சென்னை கடற்கரையில் துயில் கொண்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சூளுரை ஏற்க வேண்டும்''.
இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.
மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி பேசியது:
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா தினமும் 20 மணிநேரம் மக்களுக்காக உழைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு விவசாயியான எடப்பாடி பழனிசாமி முதல்வராக சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறார்.
கரோனா காலத்திலும் முதல்வர் பழனிசாமி தனது உயிரை துச்சமென மதித்து, பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று கரோனா பணிகளை ஆய்வு செய்து, கரோனா பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாத்து வருகிறார்.
ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ 10-க்கு 10 அறையில் உட்கார்ந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடனும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் பேசுகிறார். அரசின் நல்ல திட்டங்களை எதிர்த்து குரல் எழுப்பி, தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் வகையில் கட்சியினர் செயலாற்ற வேண்டும். குறிப்பாக திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் வளர்மதி பேசினார்.
ஜெ.போஸ்டர் எரிந்ததால் பரபரப்பு
முன்னதாக, அமைச்சர்கள் இருவரும் கூட்டத்துக்கு வந்தபோது அவர்களை வரவேற்றுக் கட்சியினர் பட்டாசு வெடித்தபோது, சாலை மையத் தடுப்பில் ஒட்டப்பட்டிருந்த அதிமுக சுவரொட்டியில் தீப்பற்றியது. சுவரொட்டியில் இருந்த ஜெயலலிதா உருவப்படம் கொஞ்சம் கொஞ்சமாக தீயில் கருகத் தொடங்கியதால் அங்கு பரபரப்பு நேரிட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்களில் ஒருவர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, சுவரொட்டியையும் கிழித்தெறிந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT