Published : 06 Sep 2020 03:58 PM
Last Updated : 06 Sep 2020 03:58 PM
ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்குக் கட்டாயமில்லை. ஆன்லைன் வகுப்புகளில் படிக்காத மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படும்போது ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்குரிய உரிமைகள் உண்டு. அவர்களுக்கும் உரிய பாடங்கள் வழங்கப்படவேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் தமிழகத்தில் நடந்துள்ளன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
குடும்பச் சூழல், பெற்றோர் மனநலன், மாணவர் மனநலன், உடல் நலன், வீட்டில் உகந்த சூழல், பெற்றோர் மாணவர்களுக்கு அளிக்கும் அழுத்தம், சக மாணவர்களிடையே பழகாமல் தனிமையில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என[ பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அலுவலகம் பல்வேறு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.
அதுகுறித்த விவரம் வருமாறு:
* இணையவழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் அவர்களது பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட இணையவழிக் கல்விக்கான வழிகாட்டுதல்களின் கீழ்க்கண்ட பகுதிகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மூலம் மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.
* மாணவர்களின் நலன் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடும் முன்பு மாணவர்களுக்குத் தேவையான உணர்ச்சிகரமான ஆதரவை வழங்கி உதவ வேண்டும். மேலும், தொற்றுநோய்த் தடுப்புக்கான ஆரோக்கியமான நடைமுறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து உணவுகள் பற்றியும் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
*மாணவர்களுடன் ஆரோக்கியமான தொடர்பினை ஏற்படுத்திய பின்னரே கற்பித்தலைத் தொடங்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் தனித்துவமான பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
*ஆசிரியர்கள் பற்றியும் இணையவழிக் கற்றலில், ஈடுபடுதலில் உள்ள தடைகளை எவ்வாறு அகற்றுவது என்பது பற்றியும் பாதுகாப்பான இணையவழிக் கற்றல் குறித்து மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
* மாணவர்களின் உடல் நலத்தினை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் தங்கள் உடலை சீரான இடைவெளியில் நீட்டவும், அடிக்கடி கண்களைச் சிமிட்டவும், மின்னணு உபகரணங்கள் சாதனங்களை வசதியான நிலையில் வைத்திருக்கவும், வகுப்புகளின்போது குடிநீரை வைத்திருக்கவும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
* மாணவர்களுக்குக் குடும்பத்தில் குறிப்பிட்ட மன உளைச்சல்கள் அல்லாது இருப்பினும் அவர்கள் சக மாணவர்களை நேருக்கு நேர் தொடர்புகொள்ள இயலாது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது, பெற்றோரை மன அழுத்தத்தில் பார்ப்பது போன்ற கவலைகளில் இருந்து மாணவர்களைப் புதிய கற்பித்தல் பயன்முறை நோக்கித் திருப்ப மேற்கூறிய அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இணையவழி வகுப்புகளில் வருகை கட்டாயமில்லை, இணையவழி வகுப்புகளில் வருகை, செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாகக் காணப்படாது.
*பள்ளிகள் திறக்கப்படும்போது இணையவழி அமர்வுகளுக்கு வருகை புரியாத மாணவர்களும் இணையவழி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு இணையாகப் பாடங்களில் பயிற்சி வழங்குவதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்றவாறு கூடுதல் வகுப்புகளை நடத்தி உறுதிப்படுத்த வேண்டும்.
* மின்னணு முறைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவில் இருந்து அனுப்பப்படும் நிர்ணயிக்கப்பட்ட பணிகள் மற்றும் மதிப்பீடுகள் ஏதும் இறுதி தரம்/ மதிப்பெண்கள்/செயல்திறன்/ மதிப்பீடு போன்றவற்றைக் கணக்கிட கட்டாயமாக்கப்படாது.
* குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் அவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கலந்துகொள்ள முழுமையான இணையப் பாதுகாப்பு அரணுடன் கூடிய கற்றல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி/ பள்ளி அமைப்புகளுக்கு தேவையான சாதனங்கள் மற்றும் இணைப்பு வசதிகள் உருவாகும் வரை குழந்தைகள் இணைய வகுப்புகளில் பங்கு பெறுகிறார்களா? இல்லையா என்பதை முடிவு எடுப்பதற்கு பெற்றோர்கள்/ பாதுகாவலர்களுக்கு/ குழந்தைகளுக்குச் சாதனங்களை வழங்குபவர்களுக்கு முழுமையான அதிகாரம் உண்டு.
* பொறுப்பான மற்றும் நம்பகமான பெரியவரால் குழந்தைகள் மேற்பார்வை செய்யப்படாதபோது இணையவழி வகுப்புகளுக்கு எந்த ஒரு சாதனத்தையும் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்ள எவரையும்/ பெற்றோர் அல்லது பாதுகாவலரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
* எந்த ஒரு இணையவழி வகுப்புகளிலும் எவரும் எந்தக் குழந்தைகளிடமும் கட்டாயம் வேண்டும், அவசியம் வருகை கணக்கிடப்படும், தரநிலை மதிப்பெண்கள், மதிப்பீடு ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி கலந்துகொள்ள நிர்பந்திக்கக் கூடாது. இது குடும்பம் அல்லது சமூகத்தில் எதிர்பாராத மோதல்களை அல்லது விளைவுகளைக் கொண்டு குழந்தைகளுடைய மன அழுத்தம் அல்லது இழந்தது போன்ற உணர்வுகளை உருவாக்கும்.
* அனைத்து ஆசிரியர் பள்ளி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணையவழிக் கல்வி தொடர்பாக அறிவிக்கும்போது குரலால் அல்லது கடிதத்தின் வரைவு/ மொழியின் பயன் முறையிலும் கூட கட்டாயத்தில் ஒரு குறிப்பும் இருத்தல் கூடாது என்பதை உணர்த்தப்பட வேண்டும்.
* குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இணையவழி வகுப்புகள் நடந்தால் அவர்களுக்குச் சாதனங்களின் பற்றாக்குறை இருப்பின் மூத்த குழந்தை சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நெறிமுறைகளைப் பின்பற்றலாம். இதன் பொருட்டு குடும்பத்தில் நிகழும் மனப் போராட்டங்கள் குறைக்கப்படும்.
*பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை ஆலோசகராக நியமிக்க வேண்டும். எந்த ஒரு இணையப் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றியும் தெரிவிக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவும் வகையில் இணையவழி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னரே ஆலோசகரின் கைப்பேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
* இணையவழி வகுப்புகளில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் குறை தீர்க்கும் வகையிலும் இணையவழி வகுப்புகள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொண்டுள்ள வேறு எந்த ஒரு உணர்ச்சிகரமான இடர்ப்பாடுகளையும் தீர்க்கும் வகையில் ஆலோசகர் செயல்பட வேண்டும். இது சம்பந்தமாக எழும் எந்த ஒரு தீவிரமான நிலைமை குறித்தும் ஆலோசகர்கள் நேரடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடத்தில் தெரிவிக்கலாம்.
* ஆன்லைன் பாடம் சம்பந்தமாக நியாயமான கோரிக்கைகள் குறைகள் ஏதும் இருப்பின் அதுகுறித்து முதன் முதலில் ஆசிரியர் ஆலோசகர் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிவிக்கவும். ஆலோசகர் ஆசிரியர் பள்ளி நிர்வாகத்தினால் நியாயமான குறைகளுக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை எனில் தீர்வு மற்றும் துரித நடவடிக்கை வேண்டிய எந்த ஒரு புகாரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம்.
* மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் இணையவழி வகுப்புகள் பற்றிய புகார்களைப் பெற வேண்டியும், குறைகள் மற்றும் சிக்கல்கள் பற்றி அறியவும் grievancesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.
* மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள் எந்த ஒரு மன அழுத்தம் அல்லது பதற்றம் தொடர்பான ஆலோசனைகள் பெற பள்ளிக் கல்வித்துறையின் தொலைபேசி உதவி சேவை எண் 14417 பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT