Published : 06 Sep 2020 11:13 AM
Last Updated : 06 Sep 2020 11:13 AM
திருச்சியில் நேற்று முன்தினம் பெய்த ஒரு மணி நேர கன மழைக்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போதிய வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து குடியிருப்புகள், வணிக நிறுவ னங்களுக்குள் புகுந்ததால் பொது மக்கள் அவதியுற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், இரவில் திடீரென கனமழை பெய்தது.
வாத்தலை அணைக்கட்டில் 10.80 மி.மீ, முசிறியில் 45 மி.மீ, புலிவலத்தில் 4 மி.மீ, தாத்தை யங்கார்பேட்டையில் 21 மி.மீ, கொப்பம்பட்டியில் 17 மி.மீ, துறை யூரில் 27 மி.மீ, பொன் மலையில் 21 மி.மீ, சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 4.70 மி.மீ, ரயில்வே ஜங்ஷனில் 31 மி.மீ, கோட்டை பகுதியில் 45 மி.மீ அளவுக்கு மழை பதிவானது.
மாநகரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. நத்தர்ஷா பள்ளி வாசலுக்குள் புகுந்த மழைநீர் ஒரு அடி உயரத்துக்கு மேல் தேங்கியது. இதேபோல, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள தனியார் வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் இருந்த கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் கடைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த செல்போன் உதிரி பாகங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. கீழப்புதூர் பாலத்தில் மழைநீர் தேங்கியதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அப் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடியது. இதனால், மிகுந்த துர்நாற்றம் வீசியதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இதற்கிடையே, ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் வீதி வஉசி தெருவின் பின்பகுதியிலுள்ள 6 அடி அகலமுள்ள சந்து பகுதியில் 3 அடி அகலத்துக்கு கழிவுநீர் செல்கிறது. இதில் ஏற்கெனவே மண் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று பெய்த கனமழையின்போது கழிவுநீருடன் கலந்த மழைநீர், வாய்க்காலில் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதியுற்றனர்.
எனவே, இனிவரும் நாட்களிலாவது இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க கழிவுநீர் வாய்க்காலை தூர் வாரி, அதன் மேற்பகுதியில் கான்கிரீட் சிலாப் போட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு விவேகானந்தா சமூக சேவை அமைப்பின் செயலாளர் டி.சந்தானகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில்...
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு(மி.மீட்டரில்): கிருஷ்ணராயபுரம் 78, மாயனூர் 62, குளித்தலை 15, கரூர் 3. மாவட்டத்தில் சராசரியாக 13.17 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...