Published : 05 Sep 2020 07:58 PM
Last Updated : 05 Sep 2020 07:58 PM

நெல்லையில் 103 கரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளன; உண்மை நிலையை வெளியிடுங்கள்: அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 

சென்னை

நெல்லையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும், அரசு அறிவித்துள்ள எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் 103 ஆக உள்ளது. கரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவாருங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

நெல்லையில் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சை குறித்தும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, கரோனா உயிரிழப்புக்கு அடக்கத்திற்கு அரசு அளிக்கும் செலவு குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இதற்கு அரசுத் தரப்பில் அளித்த மரண எண்ணிக்கை 285 பேர். ஆனால், அரசு சொன்ன தகவல் 182. இதனால் 103 மரணங்கள் மறைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அடக்கச் செலவு குறித்தும், தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு குறித்தும் தகவல் இல்லை என பிரம்மா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இச்செய்தியைக் குறிப்பிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார்.

அவரின் முகநூல் பதிவு:

“கரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். 103 உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. பழனிசாமி அரசு மரணங்களைக் குறைத்துக் காட்டி மகுடம் சூட்டிக் கொள்ள நினைக்கிறது.

சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே இன்னும் விளக்கம் வரவில்லை. அடுத்து அதிர்ச்சி தந்துள்ளது நெல்லை. உயிரோடு விளையாட வேண்டாம். உண்மை நிலையை மொத்தமாக வெளியிடுங்கள்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x