Published : 05 Sep 2020 07:32 PM
Last Updated : 05 Sep 2020 07:32 PM
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பயண அட்டை வழங்குதலைத் தவிர்த்து, பழைய அட்டையையே டிசம்பர் வரை நீட்டித்து வழங்கவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் இயக்குனர் வேண்டுகோள் கடிதம் எழுதியும், எம்டிசி நிர்வாகம் மதிக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய இலவசப் பயண அட்டை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 4 மாதத்துக்கும் இது புதுப்பிக்கப்படும். கரோனா தொற்று காரணமாக ஆகஸ்டு வரை பேருந்துகள் இயக்கப்படாததால் பழைய பயண அட்டையைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கினாலும் கரோனா தொற்றுப் பரவல் உள்ளதால், புதுப்பித்தல் இன்றி டிசம்பர் வரை பயண அட்டையை நீட்டித்து வழங்க மாற்றுத்திறனாளிகள் இயக்குனர் எம்டிசி நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் இன்றி பயண அட்டையைப் புதுப்பிக்கும் அறிவிப்பை எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசின் ஒரு துறை இயக்குனர், இன்னொரு துறைக்கு வைக்கும் கோரிக்கை குறித்து கண்டுகொள்ளாமல் கரோனா தொற்றுப்பரவல் காலத்தில் மாற்றுத்திறனாளிகளை அலைய வைப்பது சரியான நடவடிக்கைதானா என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் செப்-3 அன்று போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:
“மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மற்றும் 75% இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது அவ்வாறு வழங்கப்படும் இலவசப் பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதுப்பித்து வழங்கப்படுகிறது.
மேலும், தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் இலவசப் பயண அட்டை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால், பயணம் செய்ய ஏற்கெனவே வழங்கப்பட்ட பயண அட்டையை ஆகஸ்ட் 2009 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
தற்போது தளர்வு முடிவடைந்து போக்குவரத்து செயல்படுவதால் மேலும் நான்கு மாதத்திற்கு புதுப்பித்துக்கொள்ளும் காலத்தை நீட்டித்து ஏற்கெனவே வழங்கப்பட்ட இலவசப் பயண அட்டையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இக்காலகட்டங்களில் பழைய அட்டைகளைப் பயன்படுத்திய மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி பயணம் செய்ய அனுமதி வழங்கிடுமாறு தங்கள் துறையின் கீழ் உள்ள பேருந்து நடத்துநர்களுக்குத் தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள் இலவசப் பேருந்து பயணப் போக்குவரத்திற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அட்டையையே 2020 டிசம்பர் வரை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் செப்டம்பர் 3 அன்று போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார். இந்நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இலவசப் பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட மறுவாழ்வு அலுவலங்களில் சென்று பெற வேண்டுமென செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT