Published : 02 May 2014 06:21 PM
Last Updated : 02 May 2014 06:21 PM

தமிழக மீனவர்கள் துயரத்தை ஆவணப் படமாக்கும் லண்டன் இதழியல் மாணவி

ராமேஸ்வரத்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆவணப் படமாக எடுத்து வருகிறார், லண்டன் இதழியல் கல்லூரி மாணவி ப்ளைஸி பிரசாத்.

லண்டன் காலேஜ் ஆஃப் கம்யூனிகேஷனில் எம்.ஏ இதழியல் (Journalism) இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ப்ளைஸி பிரசாத். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆலப்புழா ஆகும். கடந்த இரண்டு வாரகாலமா ராமேஸ்வரம் தீவில் முகாமிட்டுள்ள ப்ளைஸி பிரசாத் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆவணப்படமாக எடுத்து வருகின்றார்.

இதுகுறித்து ப்ளைஸி பிரசாத் கூறும்போது, "இலங்கை கடற்படையினரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் எனது ஆவணப் படத்தின் வாயிலாக பதிவு செய்து வருகிறேன்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இறந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி வழங்கினாலும், அது பெரியளவில் அந்த குடும்பத்தினரின் பயனுள்ளதாக இல்லை. படித்துக் கொண்டிருக்கும் மகன், தந்தையின் மரணத்திற்கு பின்னர் படிப்பை நிறுத்தி விட்டு கடலுக்குச் செல்லும் குடும்பத்தினரைக்கூட நான் சந்திக்க நேரிட்டது.

மீனவர்கள் கடலுக்குச் சென்றால் திரும்பி வருவோமா என்று தெரியாதா நிச்சயமற்ற வாழ்க்கைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். சமீபகாலமாக மீனவர்கள் மீதான துப்பாக்கி பிரயோகங்கள் குறைந்திருந்தாலும், இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்று மீனவர்கள் என்னிடம் கூறினார்கள்.

தனுஷ்கோடியிலுள்ள மீனவர்களையும் சந்தித்தேன். 1964 டிசம்பர் 22 புயலுக்குப் பின்னர் தனுஷ்கோடியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். தனுஷ்கோடியில் மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. கடலோரத்தில் மண்ணைத் தோண்டி, தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டிய நிலையே இன்னும் நிலவுகிறது.

தமிழில்கூட மீனவர்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து ஒரிரு ஆவணப் படங்களே வந்துள்ளதாக அறிகின்றேன். ஆனால் ஆங்கிலத்தில் எழுத்தாளர் சாகித்ய அகாடமி எழுத்தாளர் ஜோ.டி.குருஸ் மட்டும் ஓர் ஆவணப் படத்தினை எடுத்திருந்தார். மீனவர்கள் குறித்தான எனது இந்த ஆவணப் படம் சர்வதேச அளவில், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல உதவும்" என்றார் ப்ளைஸி பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x