Published : 05 Sep 2020 05:51 PM
Last Updated : 05 Sep 2020 05:51 PM
கரோனா பொது முடக்கத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் நெசவாளர்கள், தங்கள் வறுமை நிலையை அரசுக்குச் சுட்டிக்காட்டக் கஞ்சித்தொட்டி திறக்கலாமா எனும் யோசனையை நோக்கி அவ்வப்போது தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த ஜூலை மாதத்தின் இறுதி நாட்களில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம், தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நெசவாளி கோவிந்தராஜுடன் பேசும்போது, “தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7-ம் தேதி எங்கள் ஊரில் நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கலாம் எனப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஓரளவுக்குப் பாவு நூல் கிடைத்ததால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
அதேபோல், சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில், கடனை வசூலிக்கும் விஷயத்தில் நுண்கடன் நிதி நிறுவன முகவர்கள் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போதும் கஞ்சித் தொட்டி திறப்பது பற்றிய பேச்சுகளைக் கேட்க முடிந்தது. அரசு அதிகாரிகள் தலையிட்டு நிதி நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு விதித்ததால், பதற்றம் சற்றே தணிந்திருக்கிறது. எனினும், முடங்கிக்கிடந்த நெசவாளர்களின் வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லை என்பதால், கஞ்சித்தொட்டி பற்றிய பேச்சுகள் தொடரவே செய்கின்றன.
கஞ்சித்தொட்டி என்பது புதிய விஷயமல்ல. 1972-73 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின்போது கடும் பஞ்சம் நிலவியது. சோளம், ராகி, கம்புக்கே கஷ்டப்பட்டார்கள் மக்கள். ரேஷன் கடைகளில்கூட அரிசி கிடைக்காத நிலை. 3 வயதுக் குழந்தைகளுக்கு 2 துண்டு ரொட்டித் துண்டுகளை வீடு வீடாகக் கொடுத்தது அரசு. மக்கள் வண்ணாத்திக்குருணை என்ற ஒரு வகைக் குப்பை அரிசி, புழு ஊறும் மக்காச்சோளக் குருணை, மொட்டைக் கோதுமை போன்றவற்றை வாங்கிச் சாப்பிடும் நிலை இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் ஊர் ஊராக மக்களே கஞ்சித்தொட்டி திறந்தார்கள். பெரிய உருளியில், அண்டாவில் காய்ச்சி வைக்கப்படும் கஞ்சியை மக்கள் சென்று வாங்கிக் குடித்துப் பசியாறினார்கள். அப்படிக் கஞ்சித்தொட்டி வைத்தவர்கள், கஞ்சி வாங்கிக் குடித்துப் பசியாறியவர்களில் பெரும்பான்மையானவர்கள் கைத்தறி நெசவாளர்கள்.
அதன் பிறகு அவ்வளவு தீவிரமான பஞ்சம் வரவில்லை. ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை விற்பனை நிரந்தரமானது. 1980-களில் ரேஷன் கார்டுக்கு 20 கிலோ பச்சரிசி, புழுங்கல் அரிசி கிலோ ரூ.3.50 வீதம் தாராளமாக வழங்கப்பட்டது. பின்னர் மாறி மாறி வந்த திமுக, அதிமுக அரசுகளால் அரிசி இலவசமாக்கப்பட்டு விட்டது. இன்றைக்கு ஒரு குடும்பத்திற்கு 28 கிலோ ரேஷன் அரிசி இலவசமாகவே கிடைக்கிறது. கரோனா காலத்திலும் அரசின் சார்பில் கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது.
அப்படியிருந்தும் கஞ்சித்தொட்டி குறித்துப் பேசப்படுவது ஏன்? 1990-களுக்குப் பிறகு கஞ்சித்தொட்டி என்பது போராட்ட வடிவமாக மாறிவிட்டது. இப்படியொரு பதம் ஒலித்தாலே அதை அவமானமாகக் கருதுகிறது அரசு. அப்படியான அறிவிப்பு வந்த பகுதியை அக்கறையுடன் கவனிக்கிறது. பிரச்சினையைத் தற்காலிகமாகவாவது தீர்த்து வைக்க முயல்கிறது அல்லது விஷயத்தை ஆறப்போட முயல்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் காரணமாகப் பொதுப் போக்குவரத்து இயங்க ஆரம்பித்துவிட்டது. தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. எனினும், கரோனா பரவலின் அபாயத்தை உணர்ந்திருக்கும் மக்கள், முன்பைப் போல அத்தனை எளிதில் இயங்கத் தயாராக இல்லை. இந்நிலையில், அரசிடமிருந்து நிவாரணம் கிடைத்தால்தான் மீண்டெழ முடியும் என்று நெசவாளர்கள் கருதுகிறார்கள்.
பசி, பட்டினி, பஞ்சம் என எந்த ஒரு போராட்டமும் முதலில் நெசவாளர்களிடமிருந்தே புறப்படுவது ஏன்? கஞ்சித்தொட்டி போராட்டம் குறித்து நெசவாளர்கள் என்ன கருதுகிறார்கள்? புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த நெசவாளர் பி.கே.ஜெகன்னாதனிடம் பேசினேன்.
''கரோனா பொது முடக்கம் வந்த பின்னாடி மக்கள்கிட்ட பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் வரவை வச்சுத்தான் சாப்பிடறதுக்குப் பயன்படுத்தறாங்க. எல்லாக் கஷ்ட காலத்திலயும் இதுதான் நடக்கும். அதனாலதான் முதல் ஆளா நெசவாளர்கள் பாதிக்கப்படறாங்க. இது தொடர்பா முதல்வரைப் பார்த்தோம். அவர் மூணு மாசம் முன்னால நெசவாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் தர்றதா அறிவிச்சார். ஆனால், அது இதுவரை கொடுக்கப்படலை.
அரசாங்கம்தான் எப்படிக் கொடுக்கும்? தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் நெசவாளர்கள் இருக்காங்க. அதுல 30 வருஷத்துக்கு முந்தி சொசைட்டியில 5 ஆயிரம் பேர் பதிவு செஞ்சிருந்தாலே அதிகம். மத்தவங்களை எல்லாம் எந்தக் கணக்குல வைக்கிறது? அதனால அரசை எதிர்பார்க்காம நாங்களா சங்கம் சங்கமாச் சேர்ந்து ஒவ்வொரு ஊரிலும் ரொம்பச் சிரமத்துல உள்ள நெசவாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்னு கொடுத்தோம். நாங்களும் எத்தனை நாளைக்குத் தர முடியும்? எங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்கணும்'' என்றவரிடம், ''மீண்டும் கஞ்சித்தொட்டி திறக்கப்போவதாக அவ்வப்போது பேச்சு எழுகிறதே?'' என்று கேட்டேன்.
''1972-ல் இருந்த சூழல் வேற. இப்ப இருக்கும் காலம் வேற. அப்படியொரு சூழ்நிலை வந்தா ஒரு பகுதியில இருக்கிறவங்க காசு போட்டு ஒருத்தருக்கொருத்தர் உதவிக்குவாங்க. கஞ்சித்தொட்டி திறக்கும் அளவுக்கு விட்டுட மாட்டாங்கன்னு நெனைக்கறேன்'' என்றார்.
நம்பிக்கைதானே வாழ்க்கை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT