Published : 05 Sep 2020 05:40 PM
Last Updated : 05 Sep 2020 05:40 PM

வட்டி விகிதங்களில் வீட்டு வசதிக்கடன் நிறுவனங்களின் இரட்டை அணுகுமுறையை தடுக்க வேண்டும்: மத்திய நிதி அமைச்சருக்கு மதுரை எம்.பி கடிதம்

மதுரை

வட்டி விகிதங்களில் வீட்டு வசதிக்கடன் நிறுவனங்களின் இரட்டை அணுகுமுறையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு, மதுரை மக்களவைத்தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பெரும் இழப்புகளுக்கு ஆளாவதையும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.

ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும்போது, ஏற்கெனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் புதிய வட்டி விகிதங்களை மாற்றுவது நியாயமற்ற நடைமுறையாகும்.

எல்லா வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களும் வட்டி விகிதங்கள் உயர்வுக்கு ஆளாகும் போது தன்னியக்கமாகவே வாடிக்கையாளர் களுக்கான வட்டி விகிதத்தை ஏற்றி பிடித்தம் செய்து விடுகின்றனர்.

ஆனால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் அப்பயனை பெற விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற நடைமுறையை கடைபிடிக்கின்றனர். இதை அவர்கள் செய்யாவிடில் பெரும் இழப்பிற்கு ஆளாகிறார்கள்.

மேலும் இந்நிறுவனங்கள், அப்பயனை வழங்குவதற்கு அலுவலக நடைமுறைக்கு சில ஆயிரங்களை சேவைக் கட்டணமாக விதித்து, அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் கட்ட வேண்டியுள்ளது. வட்டி விகித மாற்றங்களுக்கு இரட்டை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது முரணானது.

எனவே வாடிக்கையாளர்கள் நலன் காக்கும் வகையில், எல்லா வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களும் இத்தகைய தர்க்க நெறிகளுக்கு மாறான நடைமுறையைத் தொடராமல் தடுக்க வேண்டும். வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டித் தொகைகளை பின்தேதியிட்டு

திரும்ப வழங்குவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x