Published : 05 Sep 2020 05:45 PM
Last Updated : 05 Sep 2020 05:45 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்துப் பயண அட்டை: மறுவாழ்வு அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்: எம்டிசி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பயண அட்டைகளை அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், இம்மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், மாற்றுத் திறனாளிகள் (பார்வைக் குறையுடையோர், உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர்கள்) பேருந்துகளில் பயணம் செய்திட ஏதுவாக, கட்டணமில்லாப் பயண அட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகவும், ஏற்கெனவே பெற்றுள்ளவர்களுக்கும் புதுப்பித்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் உட்பட இந்தக் கட்டணமில்லாப் பயண அட்டைகளின் கால வரம்பானது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் பொது முடக்கம் காரணமாக போக்குவரத்துத்துச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டிற்கான (ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை) புதுப்பிக்கப்பட்டுள்ள 2,056 மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அட்டைகள் சென்னை கே.கே.நகர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வாயிலாக வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள பயண அட்டைகள் யாவும் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏனைய பிற மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லாப் பயணச் சலுகை அட்டையானது அந்தந்த மாவட்டங்களிலுள்ள மறுவாழ்வு அலுவலகங்கள் மூலமாகவே வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சென்னையிலும் மாற்றுத் திறனாளிகள் (பார்வைக் குறையுடையோர், உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர்கள்) தங்கள் சலுகை அட்டையினைப் புதுப்பிக்கும் பொருட்டு, தொடர்புடைய மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களுக்குச் சென்று உரிய விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை (மாவட்ட மறுவாழ்வு அலுவலரின் சான்றிதழோடு) மீண்டும் மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்திற்கு வந்து உரிய சலுகை அட்டைகளைப் பெறுவர்.

தற்போது இதில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் தலைமையகம் ஓரிரு முறை வந்து செல்லும் அலைச்சலைத் தவிர்த்து, விண்ணப்பம் பெறுகின்ற அலுவலகங்களிலேயே இந்தப் பயண அட்டைகளை உடனுக்குடன் வழங்கிட மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த ஆண்டுக்கான (2020-2021) கட்டணமில்லாச் சலுகை அட்டைகளைத் தொடர்புடைய அந்தந்த மண்டல மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை (சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு) அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் promtc123@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 044-23455801 என்ற எண்ணிலும் மக்கள் தொடர்புப் பிரிவினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x