Published : 05 Sep 2020 05:09 PM
Last Updated : 05 Sep 2020 05:09 PM

குமரி தொகுதியைக் குறிவைக்கும் விஐபிக்கள்: காங்கிரஸ், பாஜகவில் சீட் கேட்டுக் கடும் போட்டி 

பொன்.ராதாகிருஷ்ணன், விஜயதாரணி, விஜய் வசந்த்

முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மறைவால் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு போட்டியிட, காங்கிரஸ், பாஜக கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் முட்டிமோதி வருகின்றனர்.

தமிழக அளவில் தேசியக் கட்சிகள் செல்வாக்கோடு இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் இங்கு சமபலத்தோடு உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரும் போட்டியிட்டனர். இதில் வசந்தகுமார் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் எதிர்பாராத விதமாக வசந்தகுமார் மரணம் அடைந்தார். தொகுதிக்குள் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதால் இரு தரப்பிலும் சீட்டைப் பெற முக்கியப் பிரமுகர்கள் காய்நகர்த்தி வருகின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்குப் பொற்காலமா?

1991-ம் ஆண்டில் இருந்து இதுவரை 8 முறை இதே தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், அதில் வெற்றி பெற்ற இரு முறையும் மத்திய இணை அமைச்சராக இருந்தார். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இப்போது 68 வயது ஆகிறது. பாஜகவைப் பொறுத்தவரை 70 வயதைக் கடந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்படுவதில்லை. கர்நாடகாவில் எடியூரப்பா உள்பட வெகு சிலருக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அடுத்த பொதுத்தேர்தலில் 73 வயதைத் தொடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இதனால் சீட் கிடைக்குமா? அல்லது அதற்கு முன்னதாக வரும் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி நகர்வாரா? என்றெல்லாம் பாஜகவினரே யோசித்துக் கொண்டிருந்த நிலையில்தான் பொன்.ராதாகிருஷ்ணன் 70 வயதைக் கடக்கும் முன்பே இடைத்தேர்தலைச் சந்திக்கிறது கன்னியாகுமரி தொகுதி.

கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர் என்பதாலும், தொகுதிக்குள் இருக்கும் அறிமுகமும், தலைமையின் மீதான விசுவாசமும் சீட் வாங்கிக் கொடுக்கும் என நம்புகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அதேநேரம் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் ‘கட்சி விருப்பப்பட்டால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன்’ எனப் பேசியிருந்தார். ஆனால், அது வெறுமனே செய்தியாளர்களின் கேள்விக்காக மட்டுமே சொல்லப்பட்ட பதில் அல்ல என்கிறார்கள் உள்நடப்பு அறிந்தவர்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லையை மையமாக வைத்து அரசியல் செய்து வந்த நயினார் நாகேந்திரனுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அவர் போட்டிக் களத்தில் எதிர்க் கட்சிகளுக்குக் கடும் சவாலாக இருந்தார். நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட அரசியல் களத்தில் இருந்தாலும் அவரது பூர்வீகம் நாகர்கோவில், வடிவீஸ்வரம் பகுதிதான். ஓட்டல் உள்பட நாகர்கோவில், கன்னியாகுமரியில் அவரது குடும்பத்தினருக்கு வர்த்தகமும் இருக்கிறது. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நயினார் நாகேந்திரனுக்கு உண்மையிலேயே கன்னியாகுமரி தொகுதியின் மீது ஒரு கண் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மிசோரம் கவர்னராக இருந்த கும்மனம் ராஜசேகரன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருவனந்தபுரம் தொகுதியில் தேர்தலைச் சந்தித்ததுபோல் தமிழிசை சவுந்தரராஜனும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் பாஜகவினரும் இருக்கிறார்கள். தேசிய மகளிரணிப் பொதுச்செயலாளர் விக்டோரியா கெளரி உள்பட பலரும் சீட் கேட்டாலும் இப்போதைய சூழலில் பொன்னாரின் ரூட் க்ளியராக இருப்பதாகத்தான் தெரிகிறது.

விஜயதாரணியின் காய்நகர்த்தல்

காங்கிரஸ் கட்சியிலும் சீட் பெறப் பெரும் படையே முயற்சித்துக் கொண்டிருக்கிறது. விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி காங்கிரஸ் சார்பில் தொகுதியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காலம் இன்னும் ஒரு வருடம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் நாடாளுமன்றம் நோக்கி நகர்வதைத் தன் கனவாக வைத்திருக்கிறார் விஜயதாரணி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வசந்தகுமாருக்கு ஒதுக்கப்பட்டபோது அதை நேரடியாகவே விமர்சித்தார். தேர்தல் நேரப் பிரச்சாரம், தேர்தலுக்குப் பிந்தைய நன்றி அறிவிப்புக் கூட்டம் ஆகியவற்றிலும் அவர் பெரிதாகக் கலந்துகொள்ளவில்லை. விஜயதாரணி சீட் பெறுவதற்காகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கும் சூழலில் காங்கிரஸ்காரர்களோ, ’வசந்தகுமார் மறைவுக்குக் கூட அவங்க ஊர்ப்பக்கம் வரல’ என ஆதங்கப்படுகிறார்கள்.

குமரி மாவட்டத்தின் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமாருக்கும், விஜயதாரணி பாணியிலேயே நாடாளுமன்றத் தொகுதியின் மீது கண் இருக்கிறது. இதனிடையே வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அரசியலுக்கு வரவேண்டும். வசந்தகுமார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர வேண்டும் என வசந்தகுமாரின் நண்பர்கள் அழைப்பு விடுப்பதும் தொடர்ந்து வருகிறது. சீட் கிடைத்தால் நிற்பது என்னும் முடிவில்தான் விஜய் வசந்தும் இருக்கிறாராம்.

இதேபோல் நாங்குநேரி இடைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய ரூபிமனோகரன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ், கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் எனப் பலரும் இந்த ரேஸில் இருக்கிறார்கள். இவர்களில் யாருக்கு சீட் கிடைக்கும்? என்பது தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x